Designed by Iniyas LTD
லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் பைசர் முஸ்தபாவுக்குமிடையில் கடும் போட்டி
கிராமியப் பாதைகளின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் பைசர் முஸ்தபாவுக்குமிடையில் கடும் போட்டியொன்று நிலவுவதால் அபிவிருத்திக்கான நிதியை யாருக்கு வழங்குவது என்பதில் சிக்கல்ஏற்பட்டிருப்பதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிராமியப் பாதைகளின் அபிவிருத்திப் பணி உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கே உரியது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வாதிடுகிறார். அந்தப் பணி பிரதேச மட்டத்தில் நடைபெறவிருப்பதால் அந்தப் பொறுப்பு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கே வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் முஸ்தபா எதிர்வாதம் செய்து வருகிறார். இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் கிராமியப் பாதைகளின் அபிவிருத்திக்கு 450 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதி எந்த அமைச்சுக்கு வழங்கப்படவேண்டுமென்பது தொடர்பில் இரு அமைச்சர்களுக்குமிடையில் நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பைசர் முஸ்தபா, கிராமியப் பாதைகள் மாகாண மட்டத்திலேயே தர வரிசைப்படுத்தப்படுவதால் அவற்றின் அபிவிருத்திப் பணிகள் தனது அமைச்சுக்கே உரியது எனவும், இதற்கு முந்திய சந்தர்ப்பங்களிலும் அவ்வாறே நடந்திருப்பதாகவும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கு இதில் எவ்வித சம்பந்தமும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் முஸ்தபாவின் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றெனவும் நாட்டிலுள்ள எந்தப் பாதையானாலும் அதன் அபிவிருத்தி வேலைகள் பெருந்தெருக்கள் அமைச்சுக்கே உரியது எனவும் இதன் போது அவர் தெரிவித்தார்.