Designed by Iniyas LTD
வடக்கில் தலைதூக்கியுள்ள பாலியல் வன்செயல்களின் பின்னணி என்ன?
உலகில் சிறந்த ஒழுக்கம் உள்ள விடுதலை இயக்கம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையே அங்கீகாரம் அளித்திருக்கிறது. அத்தகைய விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறந்து விளங்கிய வடகிழக்கில் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்திருக்கின்றன. இன்று வடக்கில் தொடர்ச்சியாக பாடசாலை மாணவிகளும் சிறுமிகளும் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு வல்லுறவுகளுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களின் பின்னணி என்ன என்பதே பலரும் குழப்பமாகவும் கேள்வியாகவும் உள்ளது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கில் பாலியல் வல்லுறவுகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. வடக்கில் அதிகமான துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு மிகவும் திட்டமிட்ட ஆழமான அரசியல் பின்னணி மற்றும் யுத்த விளைவு என்பன காணப்படுகின்றது என்பதை மக்களே உணர்கிறார்கள். அரசியல் நோக்கம் கருதிய திட்டங்களும் துஸ்பிரயோகங்களை தூண்டும் வழிமுறைகளும் மேற்கொள்ளப்படுவதை வடகிழக்கில் இடம்பெறும் பல சம்பவங்கள் காட்டுகின்றன.
வித்தியா முதல்
அண்மையில் யாழ்ப்பாணதத்தில் புங்குடுதீவு மாணவி வித்தியா குழுவாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. வித்தியாவுக்காக வடகிழக்கு கொந்தளித்தது. அதுமாத்திரமின்றி ஸ்ரீலங்காவிலிருந்தும் பெருமளவானவர்கள் வித்தியாவுக்கு நடந்த அநீதிக்காக குரல் கொடுத்தனர். வித்தியாவுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை உலகத்தின் கவனத்தையே ஈர்த்தது.
இப்போது ஹரிஸ்ணவி என்ற வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பாடசாலை மாணவி பாலியல் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்ற இந்த பாலியல் வன்கொலை மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றே எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஹரிஸ்ணவியின் படுகொலையும் வடக்கில் பெரும் அதிர்வை எதிர் குரலை உருவாக்கியுள்ளது.
எங்கிருந்து தொடங்கியது?
இந்தப் பாலியல் வன்கொடுமைகள் எங்கிருந்து தொடங்கியவை? யுத்தம் முடிவடைந்த பின்னர் நெடுந்தீவில் ஒரு சிறுமி ஈபிடிபி உறுப்பினர் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் கொலை செய்து எறியப்பட்டார். இதேவேளை யாழ்ப்பாணம் காரை நகரில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார். வன்னியில் மன்னகுளத்தில் வசிக்கும் சரண்யா என்ற சிறுமி பாலியல் வன்புணர்வால் கொல்லப்பட்டுள்ளார்.
இப்போது வடகிழக்கில் நடைபெறும் பாலியல் சம்பவங்களை எடுத்துப் பார்த்தால் கடந்த காலத்தில் இராணுவத்தினர் தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்ந்து கொலை செய்த முறைகளில் நடத்தப்பட்டுள்ளன. வித்தியா, ஹரிஸ்ணவியின் காட்சியைப் பார்த்தால் மன்னாரில் பேசாலையில் வன்புணர்ந்து கொல்லப்பட்ட காட்சிகள் எமக்கு நினைவுக்கு வரலாம். வித்தியாவின் காட்சியை பார்த்தால் யுத்த களத்தில் எறியப்பட்டவர்கள் நினைவுக்கு வரலாம். சம்பூரில் கொல்லப்பட்ட சிறுவனின் காட்சியைப் பார்த்தால் புங்குடுதீவில் கடற்படையினர் கொன்றெறிந்த தர்சியின் சடலம் நினைவுக்கு வரலாம்.
திட்டமிட்ட செயலா?
வடக்கில் போருக்குப் பின்னர் நடைபெறும் பாலியல் துஸ்பிரயோகங்களில் குறிப்பிடத்தக்கவை ஸ்ரீலங்கா இராணுவத்தால் நிகழ்த்தப்பட்டவை. இதனை முன்னைய பந்திகளில் பார்த்தோம். வடக்கில் போதைப் பொருள் பாவனை மற்றும் பாலியல் பிறழ்வு என்பவற்றை ஏற்படுத்துவதில் இராணுவத்தினரின் பாலியல் செயற்பாடுகள் மற்றும் போதைப் பாவனைகள் என்பன முன்னோடியாக அமைந்திருக்கின்றன என்பதை மறுக்க இயலாது. கடந்த காலத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட பாலியல் வன்செயல்களின் மாதிரிகளிலேயே வடக்கில் பாலியல் வன்செயல்கள் தொடர்கின்றன.
இதேவேளை வடக்கில் பாலியல் வன்செயல்களை தடுப்பதில் ஸ்ரீலங்கா அரசு அக்கறை கொள்ளாதிருப்பது ஏன் என்றும் கேள்வி எழுகிறது? தெற்கில் நடைபெற்ற சில பாலியல் சம்பவங்கள் மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளில் குற்றவாளிகளாக ஸ்ரீலங்கா அரசால் கருதப்பட்டவர்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்படுகையில் ஏன் வடக்கில் ஸ்ரீலங்கா அரசால் பாலியல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இயலவில்லை? வடக்கில் பாலியல் வன்செயல்களை ஊக்குவித்து அதனை மேம்படுத்தி தமிழ் சமூகத்தை அழிப்பதுதான் ஸ்ரீலங்கா அரசின் நோக்கமா?
புலிகள் இருந்திருந்தால்
வடக்கில் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும்போது புலிகள் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா? என்று மக்கள் கேட்கத் துவங்கிவிட்டார்கள். வித்தியாவின் படுகாலையின்போதே இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா என்று மக்கள் கேட்கத் தொடங்கினார்கள். கடந்த காலத்தில் பாலியல் குற்றங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ நீதிமன்றம் கடும் தண்டனைகளை விதித்தது. அதனால் தமிழீழம் ஒழுக்கமாக இருந்தது.
ஹரிஸ்ணவிக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பாலியல் குற்றங்களுக்கு வழங்கப்பட்ட தண்டணையே இப்போது வழங்கப்படவேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் நடு இரவிலும் எங்கும் செல்லும் ஒரு நிலமை இருந்தது. ஆனால் இன்று சிறு குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத நிலமை ஏற்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இராணுவ அமைப்பாக மாத்திரமின்றி சமூக பாதுகாப்பு இயக்கமாக, மனித, சிறுவர், பெண்கள் உரிமை பாதுகாப்பு இயக்கமாக இருந்தமையின் காரணத்தினாலுமே அன்று ஈழத்தில் பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்புடன் இருந்தனர். அச்சமின்றி வாழ்ந்தவர். இன்று புலிகளின் காலம் வேண்டுமென்று மக்கள் கோருகின்றனர்.
விழிப்படைவோம்
ஒரு இனம் விடுதலை பெறவும் உயிர்போடு இருக்கவும் இதுபோன்ற பாலியல் வன்செயல்கள், துஸ்பிரயோகங்கள் என்பன தடையானவை. அல்லது அந்த இனத்தின் பாதையை வேறு திசைக்கு திருப்புபவை என்று கூறலாம். சாதிக்க வேண்டிய கல்வியில் முன்னணியில் திகழும் அடையாளம் மிக்க குழந்தைகளை, பெண்களை ஈழத் தமிழ் சமூகம் இழப்பது நல்லதல்ல! அதுவும் யுத்தத்தில் ஏற்கனவே பல குழந்தைகளை இழந்துவிட்டோம். பல பெண்களை இழந்துவிட்டோம். கல்வியில் சாதனை நிகழ்த்தும் பல மாணவர்களை இழந்துவிட்டோம். இனியும் இழக்க இயலாது!
எனவே வடக்கில் பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பான விழிப்புணர்வுகள் அவசியமானவை. பெண்களுக்கு தற்காப்பு கலைகள், தடுப்பு நடவடிக்கைகள் என்பன அவசியமானவை. அறிவாலும் இலட்சியத்தாலும் விழிப்படைந்த ஒரு இனத்தில் -ஒரு சமூகத்தில் இதுபோன்ற செயல்களை களையும், தடுக்கும் சிறுவர்களையும் பெண்களையும் உருவாக்க வேண்டும். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பாக ஆயுதம் ஏந்தி எதிரிகளை வீழ்த்திய வேங்கைப் பெண்கள் வசித்த இந்த ஈழத்தில் இதனை சாத்தியப்படுத்துவது வெகு சுலபம்.
தமிழவன்,
செண்பகம்.
26.02.2016
