Designed by Iniyas LTD
வண்ண அடையாள அட்டை கிடைப்பதில் தாமதம் – அதிருப்தியில் வாக்காளர்
சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்கும் போது அவர்களை அடையாளம் காண்பதற்காக வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இதற்கு முன்பு தேர்தல் ஆணையம் வழங்கிய கருப்பு-வெள்ளை அடையாள அட்டைக்கு பதிலாக ரூ.25 செலுத்தி வண்ண அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் சேவை மையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை தான் வண்ணமாக இருக்கிறதே தவிர அதில் உள்ள வாக்காளரின் புகைப்படம் வண்ணத்தில் இல்லை. கருப்பு-வெள்ளையில் தான் இருக்கிறது என்ற அதிருப்தி வாக்காளர்களிடையே ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையில் புகைப்படம் உள்பட அட்டை முழுவதும் கருப்பு-வெள்ளையில் தான் இருந்தன. அதற்கு பதிலாக வண்ண அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தால் பழைய கார்டில் என்ன இருந்ததோ அது அப்படியே வண்ண அடையாள அட்டையில் வழங்கப்படுகிறது.
வாக்காளர்கள் முன்பு கலர் போட்டோ கொடுத்திருந்தாலும் அது கருப்பு-வெள்ளையில் தான் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது வழங்கப்படும் வண்ண அடையாள அட்டையில் வாக்காளரின் புகைப்படமும் கருப்பு-வெள்ளையில் தான் உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் தமிழக தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் அளித்துள்ளன. இதுகுறித்து வாக்காளர்கள் சிலர் கூறியதாவது:- கருப்பு-வெள்ளை போட்டோக்கள் வழக்கத்திலிருந்து மறைந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.
ஆனால் நாங்கள் அடையாள அட்டைக்கு கலர் போட்டோ கொடுத்தாலும் அதை கருப்பு-வெள்ளையில் தான் தேர்தல் பிரிவினர் முன்பு ‘ஸ்கேன்’ செய்துள்ளனர். ஆனால் இப்போது நாங்கள் வண்ண அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தாலும் எங்கள் போட்டோ கருப்பு-வெள்ளையில் தான் வருகிறது. இதுகுறித்து கேட்டால், உங்கள் புகைப்படம் ஏற்கனவே கருப்பு-வெள்ளையில் தான் உள்ளது. அதனால் தான் புகைப்படம் கருப்பு வெள்ளையில் வருகிறது.
இதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். நாங்கள் 25 ரூபாய் செலுத்தி வண்ண அடையாள அட்டை பெற்றும் எந்த பலனும் இல்லை. தற்போது கலர் புகைப்படம் கொடுத்து அதை அடையாள அட்டையில் சேர்த்து வண்ண அடையாள அட்டையாக கொடுங்கள் என்று கூறினாலும் நேரிடையாக வாங்க மறுக்கிறார்கள். புதிய வண்ண புகைப்படம் மாற்ற ‘ஆன்லைன்’ மூலம் படிவம் 8-ல் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதற்கு 10 முதல் 15 நாட்கள் வரை ஆகிறது. இதனால் வண்ண அடையாள அட்டை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.