Designed by Iniyas LTD
வருவதை எதிர்கொள்வோம்! -நத்தார் தின சிறப்பு கவிதை
வருவதை எதிர்கொள்வோம்!
மீண்டெழத்தான் வேண்டும்
மிளிர்ந்திடத்தான் வேண்டும்
வாழ்ந்திடத்தான் வேண்டும்
வழிகோலிடத்தான் வேண்டும்…!
இற்றைநாள்வரையில்
இன்பக்கழிப்பில் திழைத்த உலகு-தன்
இருப்பைப்பற்றிக் கவலைகொள்கிறது…
இருளைத்துடைக்கும் ஒளியொன்று
இதம்தராதா என்று இரந்துகிடக்கிறது…
துயரம் மிகும்போதுதான்
தூயவர் வருகைகளால்
புனிதம்பெறுகிறது புவியின் அழகு…
மீட்டெடுக்கும் மீட்பர்பற்றிய
சிந்தனைகள் மீளவும்
எழத்தொடங்கும் தருணங்களால்
எழில்பெற்றுக்கொள்கிறது…
பல்லாண்டுகளின்பின்
பாலனின் பிறப்பு பாவங்களின் விடுவிப்பிற்கான விடைதரும்
ஒளிவரமாய் அமைதி தரவருகிறது…
மாட்சிமைதங்கிய அப்பேரொளி
ஒவ்வொருவர்மீதும் பற்றிப் பரவட்டும்…
இம்முறை பண்டிகையின்
குதூகலங்களோடு மட்டுமே
கடந்துபோகாமல், குவலயம்
ஏங்கிநிற்கும் சுகவாழ்விற்கு
வழிகோலும் வருடத்தின்
வரந்தரும் ஒளிநாளாய்
அமைதிவழிகாட்டட்டும்…
அச்சமும், அறியாமையும் நீங்கி
ஆணவத் தலைக்கனங்கள் பொடிபட
ஆயிரம் ஒளிக்கரங்கள் கொண்ட
ஆதவன்போல் எழுகைபெறட்டும் – எமை
ஆரத்தழுவி அன்புசெய்து – கொடு
நோயினின்று இருளகற்றும்
பேரண்டப் பேரொளியாய்ப்
பூமிக்கே இதம்தரட்டும்
நம்பிக்கையின் விடியல் நம் வாசல்வர
வரவேற்கக் காத்திருப்போம்..,
அதுவரை தளராத துணிவோடு
வருவதை எதிர்கொள்ளத் திடசங்கற்பம்கொள்வோம்…!
-காந்தள்-
“நத்தார் தின நல்வாழ்த்துக்கள்”