Designed by Iniyas LTD
வலி வடக்கில் மீண்டும் காணி சுவீகரிப்பிற்கான இரகசிய முயற்சி
வலி வடக்கில் காணி சுவீகரிப்பிற்கான இரகசிய முயற்சி மீளவும் மேற்கொள்ளப்படுகிற தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கேசன்துறையிலுள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளடங்களான சுமார் 65 ஏக்கர் காணிகளை, பொதுமக்களிற்கு குறுகிய முன்னறிவித்தல் வழங்கி அளவீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வலி வடக்கில் 232 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான முயற்சியின் முக்கிய கட்டமாக, காணி அளவீட்டு பணிகள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டபோது, தமிழ் அரசியல் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அளவீட்டை தடுத்து நிறுத்தியிருந்தனர்.

கடற்படைக்கு 167 ஏக்கரும், சுற்றுலா அதிகாரசபைக்கு 65 ஏக்கரும் சுவீகரிப்பதற்கான அந்த திட்டத்திற்கு எதிராக, தமிழ் அரசியல் தலைவர்கள் பலரும் நாடாளுமன்றத்திலும், ஜனாதிபதி, பிரதமருடனான சந்திப்பில் கூட்டமைப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட 65 ஏக்கர காணியை எதிர்வரும் 4ம் திகதி அளவீடு செய்யும் இரகசிய திட்டம் அமுலபடுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது. எனினும், அதற்கான முன்னறிவித்தல் குறித்த காணி உரிமையாளர்களிற்கு அனுப்பப்படவில்லை எனவும் தெரியவருகின்றது.
இதேவேளை, நாளை- 2ம் திகதி- வலி வடக்கு பிரதேச செயலகத்தில் இந்த காணி சுவீகரிப்பு தொடர்பான சம்பிரதாயமான கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த காணிகள் புராதன வழிபாட்டிடங்கள், சமாதி உள்ளடங்களாக தனியாருக்கு சொந்தமானவை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில் ஏற்கனவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக கைவிட்ட அளவீட்டு பணிகள் மீளவும் ஆரமபிக்கப்படுவதானது ,குறித்த காணி சுவீகரிப்பை அரசாங்கம் கைவிடவில்லையென்பதையே காண்பிக்கிறது. குறித்த காணிகளை பாதுகாத்து தருமாறு பொதுமக்கள் நீண்டகாலமாக அரசியல், சிவில் செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.