தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பாடம் வேண்டாம்; நிதியை வழங்குங்கள்: மம்தா பானர்ஜி

Mamataமேற்கு வங்க அரசுக்கு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பாடம் நடத்துவதை விடுத்து, அதற்குத் தேவையான நிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கிராமப் பஞ்சாயத்து சம்மேளனக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மம்தா பானர்ஜி பேசியதாவது:
மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையானது கிராமப்புறங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை சமாளிக்க ஏராளமான நிதி தேவைப்படுகிறது. ஆனால், மேற்கு வங்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை.
வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மேற்கு வங்க அரசுக்கு மத்திய அரசு பாடம் நடத்த வேண்டாம். அதற்குப் பதிலாக, மேற்கு வங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடுவித்தால் மட்டும் போதும்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மத, இனக் கலவரங்களைத் தூண்டிவிட சில தீய சக்திகள் முயற்சித்து வருகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் இத்தகைய கலவரங்களை ஏற்படுத்துவதில் சிலர் குறியாக உள்ளனர்.
எனவே, மதம், இனம் தொடர்பான எந்த வதந்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடனும், கவனமுடனும் இருக்க வேண்டும். மாநிலங்களில் கலவரங்கள் ஏற்படுவதை எந்தச் சூழ்நிலையிலும் அனுமதிக்கக் கூடாது என்றார் மம்தா பானர்ஜி.

Comments
Loading...