தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுணதீவு சம்பவத்தின் பின்னனியில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி வேண்டுகோள்..

தனது கணவரை விடுதலை செய்யுங்கள்  என்றும் ,அவர்மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை  எனவும்  வவுணதீவு சம்பவத்தின் பின்னனியில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுணதீவு சம்பவத்தின் பின்னனியில் தனது கணவரான அஜந்தன் கைதுசெய்யப்பட்டு இன்றுவரை தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்தபோதே அவர் இதனை  கூறியுள்ளார்.

வவுணதீவு பொலீஸ் சோதனைச் சாவடியில் வைத்து இரு பொலீசார் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்ட தனது கணவரை தொடர்ந்தும் எந்தவித ஆதாரமும் இன்றி அடைத்துவைத்து விசாரணை செய்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணவர் கைது செய்யப்படும் போது நான் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை ஒன்றிற்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்தாகவும், அதனால்  மறுநாளே  கணவர் கைது செய்யப்பட்ட விபரம் எ தெரிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது கணவர் நிரபராதி அவர் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி அவர் இதுபோன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டார் என்றும்,

சம்பவ தினம் இரவு அவர் மட்டக்களப்பில் உள்ள தேசத்தின் வேர்கள் அமைப்பின் காரியாலயத்தில் பொதுமக்களுக்கான நிவாரணப் பொதிககளை தயார்செய்துவிட்டு அன்று  இரவு முழுவதும் திரைப்படம் பார்த்துக்கொண்டு பிள்ளைகளுடன் வீட்டிலே இருந்துள்ளார். அவருக்கும் பொலீசாரின் படுகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொலிசாரும் புலனாய்வு பிரிவினரும் எனது வீட்டை பல தடவை சோதனையிட்டுள்ளனர் பலதடவை எனது அம்மா பிள்ளைகள் என அனைவரையும் துருவி துருவி விசாரணை செய்துள்ளனர். எங்களிடம் இருந்த நான்கு கைத்தொலைபேசிகளையும் கொண்டு சென்றுள்ளதாகவும், எனினும் , இன்னும் விசாரணைகள் நிறைவு பெறவில்லை எனவும் அஜந்தனின் மனைவி கூறியுள்ளார்.

அதோடு தாங்கள் மிகுந்த வேதனையிலும் வறுமையிலும் வாழ்ந்துவருகின்றதாகவும்,  எங்களுக்கு 05 பிள்ளைகள் உண்டு  எனவும் அப்பாவை கேட்டு பிள்ளைகள் அழுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் மூன்றுமாத கைக்குழந்தையுடன்  பல தடவை எனது கணவரை தேடி பொலீஸ் நிலையம் சென்றுள்ளேன் ஆனால் அவர்கள் நீங்கள் வரவேண்டாம் நாங்கள் விசாரணை முடிந்தவுடன் அவரை அனுப்புவோம் என்று கூறுகின்றனர் ஆனால் இன்றுவரை தனது  விடுதலை செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில்  தனது கணவரை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அஜந்தனின் மனைவி தெரிவித்துள்ளார்.

இதேவேளை  கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் தொடர்பாக எந்த அரசியல் தலைர்களும் தனக்கு உதவி செய்யவில்லை என்பதால் தனது கணவரை விடுதலை செய்யக் கோரி நாளை காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்  அஜந்தனின் மனைவி மேலும்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...