Designed by Iniyas LTD
வாழ்நாள் முழுதும் அம்மாவுக்கு கடமைப்பட்டுள்ளோம்!
ரூ.1 கோடி நிவாரண உதவி அறிவித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏட்டு முனுசாமி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
‘வாழ்நாள் முழுவதும் முதல்-அமைச்சருக்கு கடமைப்பட்டுள்ளோம்’ என அவர்கள் உருக்கமாக கூறினர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 15-ந்தேதி நகை பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் போலீஸ் ஏட்டு முனுசாமி கொள்ளையர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் நேற்று விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் பலியான ஏட்டு முனுசாமி குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்தார். மேலும், உயிர் இழந்த முனுசாமியின் மகள் ரக்ஷனாவின் உயர்கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கே.திப்பேப்பள்ளியில் வசிக்கும் ஏட்டு முனுசாமியின் மனைவி முனிலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது கணவர் முனுசாமி, கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் இழந்தது பற்றி தகவல் அறிந்து மிகவும் வருத்தமடைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எனது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கவும், எனது மகள் ரக்ஷனாவின் உயர்கல்வி செலவை தமிழக அரசு ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். இதற்காக முதல்-அமைச்சருக்கு எனது குடும்பம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதல்-அமைச்சருக்கு நானும், எனது குடும்பமும் வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
இவ்வாறு முனிலட்சுமி கண்ணீருடன் கூறினார்.
ஏட்டு முனுசாமியின் மகள் ரக்ஷனா நிருபர்களிடம் கூறியதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் நான் 2-ம் இடம் பிடித்தேன். நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 1,182 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். கட்-ஆப் 198.4 வைத்துள்ளேன். மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். என்னை டாக்டராக்கி பார்க்க எனது தந்தை விரும்பினார்.
இந்த நிலையில் எனது உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதற்கு நான் மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சருக்கு எனது குடும்பம் என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறோம்.
இவ்வாறு ரக்ஷனா கூறினார்.