தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விஐபிக்களுடனும், அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஐஎஸ்ஐ உளவாளி

சென்னையில் கைதான ஐஎஸ்ஐ உளவாளியுடன் முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அவர் மூலம், மேலும் பல விஐபிக்களுடனும், அதிகாரிகளுடனும் உளவாளி நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் உளவாளியான இலங்கை தமிழர் அருண் செல்வராசனை என்ஐஏ போலீசார் கைது செய்தனர். பின் அவர் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்காக சிறப்பு நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

Arunஇதற்கிடையில், அருண் செல்வராஜ் பற்றி என்ஐஏ போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. அவர் நடத்தும் விழாவில் சென்னையைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருவர் கலந்து கொண்டதும், அந்த விஐபி கலந்துகொள்ளும் பல விழாக்களை அருண் செல்வராஜின் நிறுவனம் நடத்திக் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரது இணைய தளத்திலும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவர் மூலம் மேலும் பல விஐபிக்களை தொடர்பு கொண்டு விழா நடத்திக் கொடுத்தது தெரியவந்துள்ளது. மேலும், முன்னாள் தலைமைச் செயலாளர் ஒருவருடன் அருண் செல்வராஜ் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் தலைமைச் செயலாளரின் குடும்ப விழா அனைத்தையும் அருண்செல்வராசன்தான் முன்னின்று இலவசமாக நடத்திக் கொடுத்துள்ளார். அவர் மூலம் பல விஐபிக்களுக்கு இலவசமாக நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்துள்ளார்.

முன்னாள் தலைமைச் செயலாளரின் குடும்ப உறுப்பினராகவே செல்வராசன் இருந்துள்ளார். அந்த முன் னாள் தலைமைச் செயலா ளர் மூலம் பல ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதிகாரிகளுக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பல தடவை விருந்து வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து ஒரு விழாவில் சென்னை அருகே உள்ள ஒரு பல் மருத்துவக் கல்லூரி மாணவியைச் சந்தித்துள்ளார். அதன்பின் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. அந்த மாணவி வேண்டுகோளுக்கிணங்க 2 விழாக்களை கல்லூரிக்காக இலவசமாக நடிகர்கள், நடிகைகள், பாடகர்களை வைத்து நடத்திக் கொடுத்துள்ளார். அதற்கான செலவு முழுவதையும் அருண் செல்வராசனே ஏற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், ஒரு நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டராக உள்ளவருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த தொடர்பு மூலம் இந்தி நடிகர்கள், நடிகைகளுடனும் அருண் செல்வராசன் பழகி வந்துள்ளார். அந்த நடிகர், இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் படத்தில் நடித்துள்ளார். இதற்கான விழாவில் கலந்துகொள்ள அருண் செல்வராசனுடன் சென்றுள்ளார். அதன் மூலம், மும்பையிலும் அவர் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்துள்ளார். இவர் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில்தான் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிகளின் போட்டோக்களை அவர் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த தகவல்களும், என்ஐஏ போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை விஐபிக்கள் நடத்தும் விழா மற்றும், நடைபெறும் இடம் பற்றிய படங்களை தீவிரவாதிகளுக்கு அனுப்பியதன் மூலம் பல விஐபிக்கள் கலந்து கொள்கிற நிகழ்ச்சிகளை தீவிரவாதிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தும் திட்டம் வைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து அருண் செல்வராசனிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இன்று அருண்செல்வராசனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் இதுதொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி கணக்கு முடக்கம்

அருண்செல்வராசனுக்கு சென்னையில் 6 வங்கிகளில் கணக்கு உள்ளது. அதில் பல லட்சம் ரூபாய் பணம் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த கணக்குகளை எல்லாம் போலீசார் முடக்கி வைத்துள்ளனர். அதேபோல, 2 பாஸ்போர்ட் வைத்திருந்தார். அதையும் என்ஐஏ போலீசார் முடக்கியுள்ளனர். பண பரிமாற்றங்கள் யாருடைய கணக்கிற்கு நடந்துள்ளது, என்ன காரணத்துக்காக நடந்துள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பெண்களை வைத்து அரசு அதிகாரிகளை மடக்கினார்

சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவை உளவு பார்ப்பதற்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தலைமை அலுவலகமாக செயல்பட்டதும் அம்பலமாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. சென்னையில் பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை கைது செய்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகம் மற்றும் சாலி கிராமத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது தென்மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களை வீடியோ படம் எடுத்து அது தொடர்பான தகவலை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு கண்டுபிடிக்கபட்டது. இதற்கு பயன்படுத்தப்பட்ட செல்போன், லேப்டாப், ஐபேடு ஆகியவைகள் கைப்பற்றபட்டன. வைபர், ஸ்கைப் போன்ற நவீன தொழில் நுட்பத்திலும் தகவல் பரிமாற்றம் நடந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இவற்றினை ஆய்வு செய்த போது தென் மாநிலத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலமானது. இதிலும் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவிலும் தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுவது என்பது முக்கிய இலக்காக இருந்துள்ளது. மும்பை பாணியில் இந்த தாக்குதலை நடத்தவும் இதே போன்று சென்னையில் கார் வெடி குண்டு நடத்தவும் திட்டமிட்டதாக அருண் செல்வராசன் ஏற்கனவே கூறியிருக்கிறார். மேலும் அரசுத்துறை அதிகாரிகளை மயக்கி முக்கிய தகவல்களை பெற்று பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பியதும் ஏற்கனவே தெரிய வந்ததது. அரசுத் துறை அதிகாரிகளையும், பாதுகாப்பு அதிகாரிகளையும் அருண் செல்வராசன் மயக்கியது எப்படி என்பது புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. அருண் செல்வராசன் சென்னையில் ஈவன் மேனேஜ்மெண்ட் நடத்தி அதன் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில்தான் அரசுத்துறை அதிகாரிகளும் அதே கோன்று பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் மூலம் இளம் பெண்கள் பலருடனும் அருண் செல்வராசனுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே இளம் பெண்களை ஒரு கருவியாகவே வைத்து அரசுத்துறை அதிகாரிகளையும், பாதுகாப்புத்துறை கிழ் நிலை அலுவலர்களையும் மயக்கி தகவல்களை பெற்றுள்ளார். இப்படி பெறப்பட்ட தகவல்களை போலியாக இணையதளம் முகவரி தொடங்கி அதன் மூலம் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு அனுப்பியதாகவும் அருண் செல்வராசன் கூறியிருக்கிறார். இதற்காக கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு மட்டும் 40-க்கும் மேற்பட்ட போலி இணையதள முகவரிகள் தொடங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம் சம்பந்தபட்ட அதிகாரிகளை உடனடியாக தகவல்களை பெற்றிருக்கின்றனர். இதற்காக ஒவ்வொரு தகவலுக்கும் 20லட்சம் ரூபாய் பணம் கைமாறியிருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே இது தொடர்பான விவரங்களை அருண் செல்வராசனை காவலில் எடுத்து விசாரிக்கும் போது தான் தெரிய வரும்.

இதற்காக புவிருந்தவல்லி நீதமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் தாக்கல் செய்த மனு செவ்வாய் கிழமை விசாரணைக்கு வருகிறது. அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் அருண் செல்வராசனை போன்று இதற்கு முன்பு ஜாகிர் உசேன், தமீம் அன்சாரி போன்ற பாகிஸ்தான் உளவாளிகளையும் தேசிய புலனாய்வு துறை அமைப்பினர் கைது செய்திருக்கின்றனர். இவர்கள் அனைவருமே இலங்கையில் இருந்து கோடியக்கரை வழியாக தமிழகத்திற்கு ஊடுருவி இருக்கின்றனர். இவர்களை இலங்கையில் தேர்வு செய்து மூளைச்சலவை செய்து, பயிற் கொடுத்து அனுப்பியது கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபிர் சித்திக் என்பது ஏற்கனவே தெரிய வந்திருக்கிறது. இதனால் தென் மாநிலம் முழுவதுமாக பாதுகாப்பை பலப்டுத்துமாறு உத்தரவிட்டுள்ளதும், தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் அறிவுறை வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...