தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விஜயகாந்த் அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணியோடு சேர்ந்து படுதோல்வியை சந்தித்தது.  கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றியை ருசித்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் யாரும் எதிர்பாராத வகையில் டெபாசிட் இழந்துள்ளார். இது தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் விரக்தியையும் ஏற்படுத்தி உள்ளது.  கடந்த 2005-ம் ஆண்டு விஜயகாந்த் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தார்.

2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை குறிவைத்து, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற புதிய கட்சியை அவர் தொடங்கினார்.  அந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. விருத்தாசலம் தொகுதியில் களம் இறங்கிய விஜயகாந்த் தனி ஆளாகவே நின்று வெற்றி பெற்றார். பெரும்பாலான தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர்கள் வாக்குகளை அள்ளினர்.  vijayaknth

இது, அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. தோல்வியை தழுவிய நிலையில், தி.மு.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் துணையுடனேயே அக்கட்சி 5 ஆண்டு காலமும் ஆட்சியை நகர்த்தியது. இப்படி முதல் தேர்தலிலேயே பெரிய அளவில் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தினார். தே.மு.திக. எழுச்சியுடன் காணப்பட்டது.  இதன் மூலம் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வும் விஜயகாந்தும் முக்கிய இடத்தை பிடித்தனர். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தார்.

ஆனால் இக்கூட்டணி, வெற்றி பெற்ற வேகத்திலேயே முற்றுப் பெற்றுவிட்டது. பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் செயல்படவில்லை என புகார் எழுந்தது. இதுவே அவருக்கு முதல் சறுக்கலாக அமைந்தது என்றுதான் கூற வேண்டும்.  அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும், சொல்லிக் கொள்ளும் வகையில் சிறப்பாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் இருந்தது.  இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் மீதான எதிர்பார்ப்பு எப்போதும் போல அதிகமாகவே இருந்தது. அ.தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக விஜயகாந்த் கூறி வந்தார்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டம் போட்டு காய் நகர்த்திய தி.மு.க. விஜயகாந்தை எப்படியும் கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவர முயற்சி செய்தது. ஆனால் அது பலிக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக கருத்துக்களை கூறிவந்த விஜயகாந்த் தி.மு.க.வையும் விமர்சனம் செய்து வந்தார்.  இதனை பயன்படுத்தி தங்கள் பக்கம் விஜயகாந்தை இழுத்து வர மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரான வைகோ பேச்சு நடத்தினார்.  முதல்-அமைச்சர் வேட்பாளராக உங்களை அறிவித்து தேர்தலை சந்திக்கலாம் என்று மக்கள் நலக்கூட்டணி ஆசை காட்டியது. இதற்கு சம்மதித்த விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தார்.  தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.மா.கா., கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவை ஒன்றாக இணைந்து தேர்தல் களத்தில் பயணித்தன.

அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டனர். ஆனால் மக்கள் அவர்களுக்கு ஏமாற்றத்தையை அளித்தனர்.  இக்கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. விஜயகாந்த், திருமாவளவன் ஆகியோர் மட்டுமாவது வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர்களில் திருமாவளவன் பெருவாரியான வாக்குகளை பெற்றார். வெறும் 87 ஓட்டிலேயே அவர் தோற்றார். ஆனால் விஜயகாந்தோ தோல்வியை தழுவியதுடன் டெபாசிட்டையும் பறி கொடுத்தார்.  இதன் காரணமாக தே.மு.தி.க. நிர்வாகிகளும், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய வேட்பாளர்களும் கடும் விரக்தியில் உள்ளனர். சென்னையில் நடந்த தே.மு.தி.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் இது எதிரொலித்தது. தோல்வி குறித்து அவர்கள் சரமாரியான கருத்துக்களை கூறி விஜயகாந்த் மீது பாய்ந்தனர்.

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியோடு கூட்டணி அமைத்தது தவறான முடிவு என்று அவர்கள் சாடினர்.  முதல் தேர்தலில் (2006) தனித்து போட்டியிட்டு தனித்தன்மையை நிரூபித்தோம். 2-வது தேர்தலில் (2011) அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தோம். ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் சரியான முடிவை எடுக்க தவறிவிட்டோம்.  மக்கள் நலக்கூட்டணியோடு சேராமல் தி.மு.க.வோடு கூட்டணி அமைத்திருந்தால் நிச்சயமாக இந்த தேர்தலிலும் தே.மு.தி.க. சாதித்துக் காட்டி இருக்கும். பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம். அ.தி.மு.க.வும் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டிருக்கும் என சரமாரியாக தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

தி.மு.க.வோடு கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருந்தால், இன்னும் 4 மாதங்களில் (அக்டோபர்) நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் தே.மு.தி.க. உரிய பிரதிநிதித்துவம் பெற்றிருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.  இதனால் கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருப்பதாகவும் தே.மு.தி.க.வினர் குறைப்பட்டனர்.  சட்டமன்ற தேர்தல் களத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடந்து கொண்ட விதம், அவரது பேச்சுக்கள் ஆகியவை ரசிக்கும்படி இல்லையென்றும், அதுவும் நமது வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும் கட்சி நிர்வாகிகள் விஜயகாந்திடம் கூறினர்.  கலிங்கப்பட்டியில் முதலில் போட்டியிடப் போவதாக வைகோ அறிவித்ததும், பின்னர் போட்டியில் இருந்து அவர் விலகியதன் பின்னணியில் சாதிப்பிரச்சனை பேசப்பட்டதும் தென் மாவட்டங்களில் வெற்றியை பாதித்தது என்றும் புகார் கூறினர்.

தி.மு.க.வோடு கூட்டணி அமைத்திருந்தால், தேர்தல் களத்தில் வேகமோடு இணைந்து செயல்பட்டிருப்பார்கள் என்றும், ஆனால் அதுபோன்ற ஒரு ஒத்துழைப்பு மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளிடம் இல்லை என்றும், விஜயகாந்திடம் தே.மு.தி.க.வினர் விளக்கி கூறினார்கள்.  இதுபோன்ற காரணங்களும், அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு வசதியாகவே, தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணியோடு கை கோர்த்து விட்டது என்று பரப்பப்பட்ட தகவல்களுமே தே.மு.தி.க.வை வீழ்ச்சி அடையச் செய்து விட்டது எனவும் நிர்வாகிகள் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.  இப்போதைய சூழலில் தமிழக தேர்தல் களத்தில் தே.மு.தி.க. திக்கு தெரியாத காட்டில் தவிக்கும் நிலையிலேயே உள்ளது.

எனவே மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறி, விஜயகாந்த், கட்சிக்கு புது ரத்தத்தை பாய்ச்ச வேண்டும் என்றே தே.மு.தி.க. நிர்வாகிகள் எதிர்பார்க்கிறார்கள்.  எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட வேண்டும். அப்போதுதான் கட்சியின் உண்மையான பலத்தை நிரூபிக்க முடியும் என்றும் விஜயகாந்திடம் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.  இதனால் விஜயகாந்த் அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Comments
Loading...