Designed by Iniyas LTD
விடுதலை செய்யப்படும் முன்னாள் போராளிகளின் இறப்பின் மர்மம் என்ன?
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையினை சர்வதேசத்திற்கு அறிவிக்குமாறும், இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) யாழ். நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், யாழ். கோவில் வீதியில் உள்ள ஐ.நா வதிவிட காரியாலயத்தின் முன்பாக நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்கள் பல்வேறு கருத்துக்களையும் கவலையுடனும், ஏக்கத்துடனும் பதிவு செய்தனர்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் காத்திரமான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாத சூழ்நிலையில், எமது உறவுகளுக்காக காத்திருக்கின்றோம் எமது பிள்ளைகளை காட்டுங்கள் சாகும் நிலமையில் இருக்கின்றோம்.
ஒரு நாள் போராளிகளாக இருந்தாலும் பரவாயில்லை. அனைவரையும் வாகனத்தில் ஏறுமாறு இராணுவத்தினர் கூறினார்கள். அதனால் நாங்கள் 25ற்கும் மேற்பட்டோரை இராணுவ வாகனத்தில் ஏற்றி விட்டோம். ஆனால் இதுவரையில் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.
தொடர்புடைய பதிவு
இராணுவத்தினரிடம் உயிரோடு ஒப்படைத்தவர்களின் முடிவுகளே எமக்கு கிடைக்காத நிலையில், காணாமல் போனோர்களின் முடிவுகள் எமக்கு எப்படி கிடைக்கப் போகின்றதோ எமக்குத் தெரியாது. ஆனாலும், சர்வதேச சமூகத்தின் ஊடாக எமக்கு சரியான முடிவுகள் கிடைக்கப்பெற வேண்டும்.
விசாரணைக்குழுக்களை பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட வேண்டும். அதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தில் அல்லது யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட வேண்டும். கொழும்பு அல்லது சிங்கள பிரதேசங்களில் விசாரணைக்குழுக்கள் அமைக்கப்படக்கூடாது. தமிழ் விசாரணை அதிகாரிகளே எமக்குத் தேவை.
சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படும் முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்படும் போது, அவர்களின் இரத்தத்தினை சர்வதேசத்தின் முன் இரத்தப் பரிசோதகைள் செய்து விடுதலை செய்யப்பட வேண்டும். இலங்கை அரசாங்கம் அல்லது இலங்கையில் உள்ள வைத்தியர்கள் இரத்த பரிசோதனை மேற்கொள்ளக்கூடாது

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 103 போராளிகள் உயிரிழந்துள்ளார்கள். இதனை அரசாங்கம் மூடி மறைக்கின்றது. விடுதலை செய்யும் போது, போராளிகளுக்கு எந்த நோய்களும் இல்லை விடுதலை செய்கின்றார்கள். ஆனால், அவர்கள் வெளியில் வந்தவுடன், நோயாளிகளாக உயிரிழக்கின்றார்கள்.
எனவே, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடயத்தில் உறுதியான நல்ல தீர்வினைத் தருமாறும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.