Designed by Iniyas LTD
*விடுதலை முற்றம்* – முள்ளிவாய்க்கால் சிறப்பு கவிதை
*விடுதலை முற்றம்*
இரண்டு சாதிகளின் பெயராலேயே
இரண்டுபட்டுக் கிடந்தது அந்த ஊர்…
முரண்டு பிடித்த சாதிவெறிக்கு
இருக்க இடமல்ல, படுத்துறங்கத் தலையணையும், பாயும் கொடுத்துப்
படாத பாடு படுத்தியது…
ஆழ்கடல் அலைகள் ஒரு புறம்
அழகிய பனை வடலிகள் மறுபுறம்
இடையிலே பளிங்குபோல்
மணற்கடற்கரை வெளியும்
பகலிலே கிளிகளும் இரவிலே
பால் நிலவும் கொஞ்சி
விளையாடு வயல்வெளிகளாலும்
வண்ணமயமானது அவ்வூர்…
அலைகளில் ஏறிடும் வலைஞனின் வாழ்விலும், நிலங்கீறி
உழுகின்ற உழவனின்
வியர்வையிலும் செழித்துச் சிறந்து
சிங்காரம் பெற்றது அவ்வூர்….
வண்ணமயமான மணல் வெளியூர்ந்து மனித எண்ணவலைகளை நகங்களால் கீறிடும் நண்டுகள் போட்ட எல்லகளால் தான் அவ்வூர் இரண்டுபட்டுக் கிடந்ததுவோ!
கண்சிமிட்டும் காரிகையரின் காதல் வயப்பட்டு வண்டுகள்போல் சுழலும் காளையர்க்கும் இந்த நண்டுகள் போட்ட சாதி எல்லை என்றும் சவாலாகத்தான் நின்றது…
அந்த உப்பு மணல் கடல்வெளியில்
தாகம் தீர்க்கும் ஒரு நல்லதண்ணிக் கிணற்றிலும்கூட பாகப்பிரிவினை சொல்லிச் சாதியம் தன் தாகம் தீர்த்துக்கொண்டது…
மீசை முறுக்கியபடி பெருசுகளும்,
ஆசை அடக்கியபடி இளசுகளும்
ஆளாளுக்குத் தங்கள் ஆணவம் காட்டியபடி சாதிய மேற்சட்டையைச் சௌகரியமாய் அணிந்து நின்றனர்…
ஆனால்,
விடுதலை பாடிய தீப்பறவைகளின்
அக்கினிச்சுவாலையில் தேசமெங்கிலும்
சாதியப்பேயின் அட்டூழியங்கள்
சாம்பராகிக் கொண்டிருந்த
சரித்திர நாட்களில் இந்த ஊர்
முற்றமும் விதிவிலக்கா என்ன? நாளை
போர்மேகங்கள் மூண்டு பொருதும்
களமாட ஒரு தேசமே திரண்டு நிற்கும்
குருசேத்திரம் இதுதானென்று யாரும் கனவிலும் நினைத்திருக்கவில்லை..
இறுதி என்ற வார்த்தைக்கு உறுதி சேர்க்கும் நிலமாய் குருதி பாய்ச்சி எம்
விடுதலையைப் பத்திரப்படுத்திப்
பதியம் வைக்கப்போகிறோமென
எவருமே எண்ணியிருக்கவில்லை…
போர்பற்றி எரித்தது ஊரை, பொருதும்
களமாடி ஊர்பற்றி நின்றபோது
தேசம் முழுவதற்கும் தஞ்சமாய்
சீர்பெற்று நின்றது அவ்வூர்…
ஒரு இனத்தின் ஒட்டு மொத்தக் கண்ணீரிலும், கட்டுக்கட்டாய்
உடல் சரிந்து ,சொரிந்து நின்ற
செந்நீரிலும் நனைந்து குளித்தபடி
பேதமை தகர்ந்து நிமிர்ந்து
நிற்கின்ற சிவந்தமண் அவ்வூர்…
அதுவே எங்கள் விடுதலை ஆன்மாவை உயிர்ப்பிக்க, ஊரெல்லாம் திரண்டபடி ஒன்றாய்த் தேசமாய்க்கூடி நின்று
சத்தியம் செய்கின்ற சரித்திர முற்றமாம்
*முள்ளிவாய்க்கால் எனும் பேரூர் *
-காந்தள்-
