Designed by Iniyas LTD
விவசாயிகள் மொத்த கடன் தொகை ரூ.6,139 கோடி!
தமிழ்நாடு அனைத்து வங்கிகள் குழு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழக விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கிய விவசாய கடன் ரூ.6,139.74 கோடி வராக்கடனாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கல்விக்கடன் ரூ.2,644.07 கோடி வராக்கடனாகவும், சிறு மற்றும் குறு தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.9,756.32 கோடி வராக்கடனாக உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து புலியூர் நாகராஜன் கூறியதாவது:-
தமிழக விவசாயிகளின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மொத்த கடன் தொகை ரூ.6,139.74 கோடி என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொகையினை மத்திய அரசு உடனடியாக தள்ளுபடி செய்யவேண்டும். அல்லது தமிழக அரசு முழுமையாக இந்த கடன் தொகையை ஏற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும்.

பிரச்சனை குறித்து பேச விவசாயிகளை பிரதமரிடம் தமிழக முதல்வர் அழைத்து செல்லவேண்டும். தலையாய இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 36 நாட்களாக உயிரை பணயம் வைத்து டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை பிரதமர் அழைத்து பேசி விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யவேண்டும்.
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்துமின்றி தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் மேற்கொள்ள வேண்டும். அதேபோல் தமிழக முதல்வரும் டெல்லி சென்று விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கடன்களை தள்ளுபடி செய்ததை முன்னுதாரணமாக கொண்டு தமிழக விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.