Designed by Iniyas LTD
வீரர்கள் தேர்வில் தோனி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்
டெஸ்ட் தொடரில் வரிசையாக இரண்டு ‘அடி’ வாங்கிய இந்திய அணி, ஐந்தாவது போட்டியில் மானம் காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இப்போட்டிக்கு பொருத்தமான 11 வீரர்களை தேர்வு செய்வதில் தான் கேப்டன் தோனியின் சாமர்த்தியம் இருக்கிறது
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மூன்று, நான்காவது போட்டியில் அடுத்தடுத்து தோற்ற இந்தியா, 1–2 என பின்தங்கியுள்ளது. மிக முக்கியமான ஐந்தாவது டெஸ்ட் நாளை ஓவலில் துவங்குகிறது. இதில், இந்தியா வென்றால் தொடரை சமன் செய்யலாம். இதனை மனதில் கொண்டு வீரர்கள் தேர்வில் தோனி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
கடும் போட்டி:
நான்காவது டெஸ்ட் போட்டிக்கு ஷிகர் தவான், முகமது ஷமி, ரோகித் சர்மா நீக்கப்பட்டு, காம்பிர் வருண் ஆரோன், அஷ்வின் இடம் பெற்றனர். இது சரியான மாற்றம் என பாராட்டப்பட்டது. ஆனால், காம்பிர்(4, 8) சோபிக்க தவறினார். ‘பேட்டிங்கில்’ கைகொடுத்த அஷ்வின், தனது பிரதான பணியான சுழற்பந்துவீச்சில் கோட்டைவிட்டார். வருண் ஆரோன் மட்டுமே நம்பிக்கை தந்தார்.
தற்போது ஐந்தாவது டெஸ்டுக்கு டில்லியை சேர்ந்த இரு துவக்க வீரர்களான காம்பிர், தவான் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காம்பிருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படுமா அல்லது தவான் அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விராத் கோஹ்லி, புஜாராவுக்கு பிரச்னை இல்லை.
வருவாரா இஷாந்த்:
பந்துவீச்சை பொறுத்தவரை கணுக்கால் காயத்தில் இருந்து குணமடைந்த இஷாந்த் சர்மா நேற்று பயிற்சியில் ஈடுபட்டது நல்ல விஷயம். லார்ட்சில் 7 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட இவர், முழுஉடற்தகுதியுடன் இருந்தால் வாய்ப்பு பெறுவார். பங்கஜ் சிங் நீக்கப்படுவார். இஷாந்த் இடம் பெற தவறினால், முகமது ஷமிக்கு மீண்டும் அதிர்ஷ்டம் அடிக்கும். ஆரோன் இடம் பெறுவது உறுதி. ஐந்தாவது பவுலர் என்ற முறையில் ரவிந்திர ஜடேஜாவுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும் என, தோனி அறிவித்துள்ளதால், அஷ்வினுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘ஆல்–ரவுண்டர்’ அந்தஸ்தை தக்க வைக்க விரும்பினால், தனது சுழற்பந்துவீச்சில் ஜடேஜா புதுமைகளை புகுத்த வேண்டும்.
அனைத்து விதத்திலும் மிகச் சிறந்த அணியை தேர்வு செய்வதில் தோனி மும்முரமாக இருப்பதால், சில கடினமான முடிவுகளை எடுக்க நேரிடலாம்