Designed by Iniyas LTD
வெடி விபத்தில் இறந்த குடும்பத்துக்கு 1 லட்சம் நிதியுதவி!
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் திருச்சி மாவடடம் மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான் பட்டி கிராமத்தில் பழைய இரும்பு பொருளை உடைக்கும்போது நடந்த வெடி விபத்தில் இறந்த மாரியப்பன் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்றும், அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்றும் தி.மு.க. உறுப்பினர் கே.என்.நேரு ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், கண்ணுடையான்பட்டி கிராமம், பொத்தமேட்டுபட்டி பகுதியில் உள்ள பழைய இரும்புக் கடையில் நடந்த வெடி விபத்தில் மாரியப்பன் என்பவர் 29.6.2017 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டதுடன், மாரியப்பன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருளானந்து மற்றும் கனகராஜ் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரமும், சிறு காயமடைந்த பாலசுப்ரமணியனுக்கு ரூ.25 ஆயிரமும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஆணையிட்டுள்ளேன்.
இந்த வெடி விபத்து குறித்து உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.