Designed by Iniyas LTD
வெளிநாடு என்ன எங்கள் தனிநாடா..
அகதியென்ற அழுக்கோடு
அழகென்று சொல்லி வாழ்கிறோம்…
யார் யாரோ திரு நாட்டில்
சொர்க்க வானாய் நீள்கிறோம்…
எண்ணங்களை மாற்றித் தீயையிட்டு
அது ஜோதி என்று பார்க்கிறோம்…
மின்மினிப் பூச்சிகளை அள்ளி
நட்சத்திரங்களாய் இரசிக்கிறோம்…
அவன் நாடு அவன் அழகு
எங்களுக்கு எது வரைக்கும்
அது சொந்தம் பதில் கூறு…
ஆற வந்த இடமெல்லாம்
அன்னை மண்ணாகிடுமா?
கோடி கோடி தந்தாலும்
கோழி கோல மயிலாகிடுமா…
தென்னங்கீற்றை தழுவும் காற்றும்
வேப்ப மர நிழலின் மூச்சும்
மாமரக் குயிலின் பாட்டும்
மறவர் படையின் அன்றைய வீச்சும்
மனம் விட்டு விலகுமா?
மறக்கத் தான் முடியுமா…
சுடும் நண்டுக் குழம்புக்கும்
குளிர் பெட்டி உணவுக்கும்
எதிர் புதிர் கணக்கிருக்கு…
உடல் மொழி நடிப்போடு
ஆயிரம் மொழி பேசினாலும்,
கிரில் இறைச்சி போட்டு
முக நூலில் கிறீடம் பூட்டினாலும்,
நீ தமிழன்….
உனது மொழி தமிழ்….
கலைப்பரிதி.