Designed by Iniyas LTD
வெள்ளத்தில் தத்தளிக்கும் பிரான்ஸ்
100 ஆண்டுகளில் இல்லாத அளவில், பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், தலைநகர் பாரீஸ் உட்பட பல பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேற்கு ஐரோப்பிய நாடான பிரான்சில், தலைநகர் பாரீஸ் மற்றும் மத்திய, தென்கிழக்கு பகுதிகளில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, பலத்த மழை பெய்து வருகிறது.

பாரீசில் ஓடும் ஸுன் நதியின் இருபுறமும், வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, நகருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால், சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மத்திய பிரான்சில், வெள்ளத்தில், ஒரு மூதாட்டி அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கிய 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர், மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பாரீஸ் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை, மூன்றே நாட்களில் பெய்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில், பிரான்சில் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் பிரதமர் மானுவேல் வால்ஸ், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தியுள்ளார். ஜெர்மனியில் பலி 8இதேபோல், மற்றொரு ஐரோப்பிய நாடான ஜெர்மனியும், பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. முனிச் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பவேரியா மாகாணத்தில்தான், வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் 10 அடி உயரத்துக்கு மேல் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள், மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மழை, வெள்ளத்துக்கு, ஜெர்மனியில் இதுவரை, எட்டு பேர் இறந்து விட்டனர். மேலும் சிலரை காணவில்லை. ‘அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும்’ என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.