தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வேண்டாம் இன்னொரு அமிர்தலிங்கம்!

pms-sampanthan-860-15

அண்மையில் மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்­ராஹிம் அன் ஸார் மலேசியப் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஸ்ரீலங்காப் பாராளுமன்றத்தில் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் ஸ்ரீலங்காப் பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் கடுமையான கண்டன மழையை பொழிந்துள்ளார். தான் ஒரு ஸ்ரீலங்கா எதிர்கட்சித் தலைவர் என்பதையும் தான் ஒரு ஸ்ரீலங்காப் பிரஜை என்பதையும் சிங்களவர்களுக்குச் சொல்ல மாய்ந்து மாய்ந்து பேசியுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசுமீது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஸ்ரீலங்கா அரசு ஈழத் தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக படுகாலை செய்திருக்கிறது. தமிழர்கள் வசிக்கும் நாடுகளுக்கு ஸ்ரீலங்கா சார்பில் வருபவர்களுக்கு கொத்துக் கொத்தாக பூக்களை கொடுக்க வேண்டும் என்று சம்பந்தர் எதிர்பார்க்கிறாரா? தமிழ் இனப் படுகொலையை மறக்கும் மனநிலையில் சம்பந்தர் இருக்கலாம். உலகத் தமிழ் மக்கள் இல்லை.

தமிழ் இனப்படுகொலையை கண்டித்தே ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக தமிழ் மக்கள் தங்கள் வாக்கு பலத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். வடகிழக்கில் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து மைத்திரியை வெல்ல வைத்தது மைத்திரி நல்லவர் என்பதனால் அல்ல. மகிந்த என்ற இனப்படுகொலையாளியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே. அதனால்தான் பின்னர், மைத்திரியின் கட்சியில் வடகிழக்கில் நின்றவர்களை தோற்கடித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வெல்ல வைத்தார்கள்.

வடகிழக்கு – ஈழத்தில் உள்ள தமிழ் மக்களின் மனங்களில் இனப்படுகொலைக்கான நீதி கோரி சிங்கள அரசுக்கு எதிராக கனலும் தீயே உலகத் தமிழர்கள் மத்தியிலும் மூழ்கிறது. தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறுதிப்போரின்போது துண்டை காணோம், துணியை காணோம் என்று வெளிநாடுகளில் பதுங்கியிருந்தது. ஆனால் உலகம் எல்லாம் வாழும் தமிழ் மக்களே போரை நிறுத்து என்று குரல் கொடுத்தார்கள்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சார்பானவர்களை தாக்கியமைக்காக கண்டனம் தெரிவித்துள்ள சம்பந்தன், போராட்டக்காரர்கள் ஈழத் தமிழர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள்மீது ஸ்ரீலங்காவில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போட்டுக் கொடுக்கிறார். சிங்களப் பேரினவாத விசுவாசம் வாக்களித்தவர்களின் மனங்களை புரிந்துகொள்ளும் இல்லை. இங்கே தமிழ் மக்கள் எத்தனையோ துன்பங்களை சுமந்து கொண்டிருக்கிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவி என்று தமிழ் மக்கள் கோரிப் போராடியபடியிருக்க, மலேசியாவில் இருக்கும் தமிழர்களை எப்படிச் சிறையில் அடைக்கலாம் என்று சம்பந்தர் ஆலோசனைகளைக் கூறுகிறார்.

கிளிநொச்சிப் பரவிப்பாஞ்சான் மக்கள் தங்கள் நிலத்திற்காக இரவு பகலாக போராட்டம் இருந்தார்கள். அவர்களுக்கு சம்பந்தர் குடுத்த வாக்குறுதி காற்றில் பறந்தது. பல நாட்கள் ஆகியும் தீர்வில்லை.  இப்போது அந்த மக்கள் உண்ணா விரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வட்டுவாகலில் இராணுவக் கடற்படை மக்களின் நிலத்தை சுவீகரிக்க நிற்கிறது. காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்றும் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்றும் தமிழ் சனங்கள் குரல் எழுப்புகின்றனர். இதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் சம்பந்தன் மலேசியா சம்பவத்திற்கு துடித்தெழும்பிக் குதிக்கிறார்.

தமிழர்களுக்கு நீதியை பெற சர்வதேச விசாரணை பெற்றுத் தருவோம் என்று தேர்தலில் கூறி வாக்கை அள்ளியவர்கள் இன்று சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று கூறிக்கொண்டு, சிங்கள அரசிடம் பதவிகளைப் பெற்று கொஞ்சிக் குலாவிக்கொண்டு, மலேசிய தமிழ் போராட்டக்காரர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை கோருகின்றனர். தமிழீழத்தை முன்வைத்து தேர்தலில் வென்று வழி தவறிய அமிர்தலிங்கத்தின் பயணம் ஒரு வலாற்றுப்பாடம். தமிழ் மக்களின் போராட்டம் ஒருபோதும் பின்நோக்காது. அதேநேரம் வரலாற்றில் இன்னொரு அமிர்தலிங்கத்தையும் போராட்டம் ஏற்காது.

தமிழவன்,
செண்பகம்.
08.09.2016

Comments
Loading...