Designed by Iniyas LTD
வேளாண்மை துறை மந்திரியுடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு!
பயிர் காப்பீட்டு திட்ட காலக்கெடு நீட்டிப்பை தமிழகத்தில் செயல் படுத்த மாநில அரசை வற்புறுத்துமாறு, மத்திய வேளாண்மை துறை மந்திரியிடம், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லியில் மத்திய வேளாண்மை துறை மந்திரி ராதாமோகன் சிங்கை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு தமிழிசை அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் பல மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளன. விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். இதனால் விவசாயிகளை காக்க பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்துக்கான காலக்கெடு டிசம்பர் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழக அதிகாரிகள் காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை என்று கூறுவதாக தகவல் வந்துள்ளது.
எனவே காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசை வற்புறுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.மேலும் மீனவர் உயிர் பாதுகாப்பு திட்டத்துக்கும் வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம், வெற்றி என்று மு.க.ஸ்டாலின் சொல்லலாம். ஆனால் தோல்வி என்று மக்கள் சொல்கிறார்கள். மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் கருப்பு பணத்தை பதுக்குகிறவர்களுக்கு ஆதரவானவர்கள். பணத்தட்டுப்பாடு பிரச்சினையை சரிசெய்யாமல் தமிழக அரசு முடங்கி இருக்கிறது.
தமிழகத்தை ஆண்ட கட்சி, ஆளும் கட்சி எதுவுமே நதிநீர் மேலாண்மையை சரியாக அணுகவில்லை. விவசாயிகளின் தற்கொலையை மட்டும் அல்ல, விஷ காய்ச்சல் சாவுகளையும் தமிழக அரசு மறைக்கிறது. மறைப்பதை விட்டு விட்டு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.