Designed by Iniyas LTD
ஸ்மார்ட் சிட்டியில் 40 விதமான பணிகள்
ஸ்மார்ட் சிட்டியின் பகுதி சார்ந்த வளர்ச்சி திட்டத்துக்கு தியாகராயநகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.877.92 கோடி மதிப்பீட்டில் 40 விதமான பணிகள் செய்யப்பட உள்ளன. 
பெருநகர சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி (சீர்மிகு நகரம்) பற்றிய குறிப்பு பற்றி மேயர் சைதை துரைசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னையை சீர்மிகு நகரமாக உருவாக்குவதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அவைகளுக்கான தக்க தீர்வுகளை கண்டறியும் பொருட்டு பல்வேறு திட்டங்களை தீட்டும் பணியில் முனைப்பாக உள்ளது. சீர்மிகு நகரத்தை உருவாக்க நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் சென்னை மக்களின் கருத்தை முதன்மையாக கொண்டிருக்கும். இதற்கு விரிவான குடிமக்களின் ஈடுபாட்டை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு அவர்கள் அளிக்கும் கருத்துகளுக்கு மதிப்பளித்து சீர்மிகு நகர திட்டங்கள் வகுக்கப்பட உள்ளது.
இந்தியாவில் சீர்மிகு நகரமாக மாற்றப்படவுள்ள 100 நகரங்களில் முதற்கட்டமாக 20 நகரங்களின் பட்டியலை 28.01.2016 அன்று மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் சென்னை தேர்வாகியுள்ளது. சென்னை மாநகரை சீர்மிகு நகரமாக உருவாக்குவதற்கு, மாமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்திற்கும் மற்றும் அரசாணையின்படி சீர்மிகு நகரம் திட்டத்திற்கான சிறப்பு நோக்கு நிறுவனம் அமைக்கும் பொருட்டு, மாமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னையை சீர்மிகு நகரமாக உருவாக்குவதற்கு மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் ஸ்மார்ட் சிட்டி மிஷன் அறிக்கை மற்றும் வழிகாட்டி, ஜூன் 2015-ன்படியும் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வழிகாட்டுதலின்படியும், சென்னை மாநகராட்சி சீர்மிகு நகரம் திட்டம் நிறைவேற்றப்படும்.
சீர்மிகு நகரத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்ற அதற்கான “சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்” என்ற பெயரில் தமிழக அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பங்குகள் 50:50 என்ற விகிதத்தில் இந்நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. சீர்மிகு நகர திட்டத்தின் தொலைநோக்கு பார்வையின்படி, பெருநகர சென்னை மாநகரத்தை தன்நிறைவுடன், நிலையான சுற்றுச்சூழல் மற்றும் சீரிய பொருளாதாரத்தை கொண்ட உலக தரம் வாய்ந்த வணிக நகரமாக மாற்றப்படும். பல்வேறு போக்குவரத்து வழிகளான ரெயில் போக்குவரத்து, மாநகர பேருந்துகள் போன்றவற்றை இணைத்து பாதுகாப்பான நடைபாதை மற்றும் சைக்கிள் தடத்தை மேம்படுத்த உள்கட்டமைப்புகள், தனிநபர் பயன்பாட்டிற்கு உகந்த நகர்புற போக்குவரத்து இயக்க மேம்பாட்டு திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
சிறந்த தெரு விளக்கு, மேம்படுத்தப்பட்ட திடக்கழிவு மற்றும் மழைநீர் மேலாண்மை அத்துடன் தொடர்ச்சியான நீர் வழங்கல் ஆகியவை முன்மொழியப்பட்ட மற்ற திட்டங்கள் ஆகும். மக்களின் கருத்துகள் அடிப்படையில் தியாகராயநகர் “பகுதி சார்ந்த வளர்ச்சி” திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பகுதி சார்ந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.877.92 கோடி மதிப்பீட்டில் 40 விதமான பணிகள் செய்யப்பட உள்ளன. மேலும் நகரம் முழுவதும் செயல்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் ரூ.488.31 கோடி மதிப்பீட்டில் 8 விதமான பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் செயல்படுத்துவதற்கான திட்டத்தில் மோட்டார் வாகனமில்லா போக்குவரத்து சார்ந்த திட்டங்கள் மற்றும் குடிநீர் மேலாண்மை வெள்ளக் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்பு மேற்கொள்வதற்கு திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பகுதி சார்ந்த வளர்ச்சி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தியாகராய நகர் 6.95 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டுள்ளது. இதில் உட்புறச்சாலைகள் 212 எண்ணிக்கையில் 55 கி.மீ. நீளத்திற்கும், பஸ் சாலைகள் 20 எண்ணிக்கையில் 2.080 கி.மீ நீளத்திற்கும் அடங்கும். இவ்வாறு அவர் பேசினார்.