தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்மித் ஆட்டமிழந்ததற்கு வர்ணணையாளர்கள் காரணமாம்!

smith_2712546fஇந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் ஆட்டமிழந்தது குறித்து சர்ச்சை உருவாகியுள்ளது. களத்தில் ஆடிக்கொண்டிருந்த ஸ்மித்துடன் மைக்கில் வர்ணணையாளர்கள் பேசிக் கொண்டிருந்தால் தான் கவனச்சிதறலில் ஸ்மித் ஆட்டமிழக்க நேரிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி, அடிலெய்டு நகரில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது, களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஹெல்மெட்டில் மைக் பொருத்தப்பட்டு, அவர் சேனல் 9 வர்ணணையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசி முடித்த அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்மித்தின் விக்கெட்டும் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையாக இருந்தது.

அவர் ஆட்டமிழந்தவுடன் இந்திய வீரர் விராட் கோலி, ‘பேசிக் கொண்டே இருக்காதே’ என்பது போல சைகை செய்து வெறுப்பேற்றினார். ஸ்மித் மைக்கில் பேசிக்கொண்டிருந்ததை குறிப்பிட்டு விராட் கோலி இதை செய்திருந்தாலும், ரசிகர்கள் பலரும் ஸ்மித்தின் இந்த மைக் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்பம் மேம்பட்டிருந்தாலும் அது ஆட்டத்துக்கு இடையூறாக இருந்தால் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என நிபுணர்கள் சிலரும் இதே கருத்தை பிரதிபலித்துள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த தொழில்நுட்பத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

“கடந்த சில ஆண்டுகளாகவே இந்த புதிய தொழில்நுட்பம் நடப்பில் உள்ளது. சேனல் 9 கண்டிப்பாக வீரர்களுக்கு தொந்தரவு தரும் எண்ணத்துடன், ஆட்டமிழக்கவேண்டும் என்று செயல்பட்டிருக்க மாட்டார்கள். சூழல் எப்படி இருந்தாலும் கவனம் சிதறாமல் ஆடுவது வீரரின் பொறுப்பு.

பிக் பேஷ் ஆட்டத்தின் போதும் களத்திலிருந்து கொண்டே பேசியுள்ளோம். பலமுறை சேனல் 9 வர்ணணையாளர்களுடன் இது நடந்துள்ளது. வீட்டிலிருந்து பார்க்கும் ரசிகர்களுக்கு களத்தில் இருக்கும் சூழலை நாங்கள் எப்படி கையாள்கிறோம் என்பது புரியும். நான் இதை பல காலமாக செய்து வருகிறேன். இது எந்த விதத்திலும் என் கவனத்தை குலைக்கவில்லை. இது பொழுதுப்போக்குக்காக மட்டுமே” என செய்தியாளர்களிடம் வார்னர் கூறியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் கோலி அடித்த பந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஸ்பைடர் கேமராவில் பட்டு பவுண்டரிக்கு போனது. ஆனால் அது ‘டெட் பால்’ (dead ball) என அறிவிக்கப்பட்டது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய கேப்டன் தோனி தொழில்நுட்பங்கள் ஆட்டத்தை பாதிக்கக் கூடாது என குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

Comments
Loading...