Designed by Iniyas LTD
ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் பாதுகாப்பிற்கு துணை ராணுவ வீரர்கள்
தமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.
இறுதி வேட்பாளர் பட்டியல்
போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். எனவே இன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போதே, வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் பல்வேறு வேட்பாளர்கள் களத்தில் உள்ள போதிலும் அ.தி.மு.க., தி.மு.க., பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது.
வேட்பாளர்களும், கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மும்முரமான பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
டெல்லியில் ஆலோசனை
இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டத்தில் அவர் பங்கேற்று, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறார்.
சந்தீப் சக்சேனா நேற்று டெல்லி புறப்படுவதற்கு முன், சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
துணை ராணுவம் வருகை
கேள்வி:- ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன?
பதில்:- ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 10 கம்பெனி (ஒரு கம்பெனியில் 65 வீரர்கள் இடம் பெறுவார்கள்) துணை ராணுவ வீரர்கள் வருகிறார்கள். அவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடுவார்கள்.
கேள்வி:- பிரசாரத்துக்கு கட்சிகள் அளித்துள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் மாற்றம் எதுவும் உள்ளதா?.
பதில்:- அப்படி எதுவும் மாற்றம் இல்லை.
இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.