Designed by Iniyas LTD
ஸ்ரீலங்கா அரசால் துரத்தப்பட்ட தமிழ்மக்கள் இன்னமும் அடிப்படை வசதிகளற்ற முகாம்களில் வாழ்கின்றனர்
திருகோணமலை மாவட்டம் சம்பூர் மண்ணில் இருந்து ஸ்ரீலங்கா அரசால் துரத்தப்பட்ட தமிழ்மக்கள் இன்னமும் அடிப்படை வசதிகளற்ற முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர், இவர்களில் கனவான சொந்த மண்ணில் எப்போது குடியேறுவார்கள்?
யுத்தம் முடிந்து எல்லோரும் சிறப்பாக, வசதியுடன் வாழ்கின்றனர் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய பட்டியலில் வலி வடக்கு, சம்பூர் ஆகிய பிரதேசங்கள் இன்றும் இருக்கின்றன.
2006ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழ்ந்த மக்கள் இன்று சொந்த இடத்திற்குள் சென்று வாழ முடியும் என்ற நம்பிக்கையிலேயே இருக்கின்றனர். ஆனால், அவர்களை சொந்த நிலத்தில் குடியமர்த்துவதற்கான எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.
அனல் மின் நிலையம் அமைப்பதற்கு தேவையான 500 ஏக்கர் நிலத்தை தவிர ஏனைய பகுதிகளிலாவது மீளக்குடியேற வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோள்.
ஆனாலும், முகாமாக இன்னும் பதிவு செய்யப்படாத கட்டைப்பறிச்சான் முகாம் மக்களுக்கு என்ன நடக்கும் என்பதையும் அரச தரப்புத்தான் கூறவேண்டும். சம்பூரை சுற்றிப் பார்க்கவே இத்தனை ஆவலாய் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த நிலமான சம்பூர் நிலத்தில் வாழவேண்டும் என்ற ஆசை எவ்வளவு இருக்கும்.
முகாம்களில் உள்ள 266 குடும்பங்கள் உறவினர், நண்பர்களின் வீடுகளில் வசிப்பவர்கள் எனக் கூறும் 825 குடும்பங்களையும் (தரவுகள் மூதூர் பிரதேச செயலகம்2014) அலைக்கழிப்பது இதற்கு முதலும் நடந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பூர் அனல் மின் நிலையத்தை அமைக்க தேவையான நிலத்தை இந்தியா எடுக்கவில்லை என்றாலும் சீனா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அந்த இடத்திற்கு போட்டி போடுகின்றன. இந்தியாவினால் சம்பூர் மக்கள் மட்டுமின்றி தமிழ் மக்களும் அல்லற்பட்டிருக்கின்ற நிலையில் 1500 இந்திய வீடமைப்பை வழங்கி சம்பூர் மக்களின் குடியேற்ற பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கிறது அரசு.

முதலீட்டு ஊக்குவிப்பு நிலையங்கள் அமைக்க அரசு எடுத்துள்ள காணிகள் மக்களுக்கு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா சம்பூர் மக்களுக்காக கருணை காட்டினாலும் பாதுகாப்பு அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தீர்வுக்கு வழிகாட்டியாக இருக்குமா என்பதும் சந்தேகமே. சிங்கள மயமாக்கப்பட்டு வரும் இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழ்வதை விரும்புமா? எனவே, தான் இன்று திருகோணமலைப் பகுதியில் தமிழர் வீதத்தை விட சிங்களவர், முஸ்லிம்களின் வீதம் அதிகரித்துள்ளது.
திருகோணமலை கடற்கரை மீது உலக நாடுகளுக்கு ஒரு காதல் இருக்கிறது. அந்த அடிப்படையிலும் சம்பூர் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். கடற்தொழில் செய்ய முடியாமல் பட்டினி கிடக்கின்றனர். கப்பல் நிறுத்த இயற்கையான புவியியல் காரணிகளை கொண்ட கிழக்கு கடற்கரையோரங்களை தற்போது இலங்கை கடற்படை ஆக்கிரமித்துள்ளது. இருந்தபோதும் சீனா, இந்தியா, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இந்த கடற்கரையோரத்தை எப்படியாவது தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நினைப்பும் இருக்கிறது.
எது எப்படியாக இருந்தாலும் சொந்த நிலத்தில் வாழவேண்டும் என்றுள்ள சம்பூர் மக்களுக்கு சம்பூருக்குள்ளேயே வாழவழிவகுக்கப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வில் மீள்க்குடியேற்றத் தீர்வும் அடங்கும்.