Designed by Iniyas LTD
ஸ்ரீ போலீசால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட இளைஞரின் வழக்கு இன்று!
பொலிஸ் காவலில் இருந்தபோது வதைக்கப்பட்டு உயிரிழந்த யாழ்.இளைஞன் சுமணனின் மரணம் தொடர்பான வழக்கு இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கைதுசெய்யப்பட்ட ஐந்து பொலிஸாரும் இன்றைய தினம் மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் என்பவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை குற்றப்புலனாய்வுப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
இதன் அடிப்படையில், ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இளைஞன் தப்பியோடி கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாகவே பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர். எனினும், தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்த சுன்னாகம் பொலிஸார், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து அடித்து, மின்சாரம் பாய்ச்சி சித்திரவதைக்குட்படுத்தியதாக சுமணனுடன் கைதுசெய்யப்பட்டிருந்த நண்பர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இதன் பிரகாரம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே ஐந்து பொலிஸார் கைதுசெய்யப்பட்டதோடு, அவர்களது வெளிநாட்டு பயணத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.