Designed by Iniyas LTD
ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் திணிக்கக் கூடாது: ஜி.கே.வாசன்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கக் கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் 18 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்குகின்றன. இந்தப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை மும்மொழிப் பாடத்திட்டத்தைக் கட்டாயமாக்க முடிவெடுத்திருப்பது ஏற்புடையது இல்லை.
தாய்மொழியைத் தவிர பிற எந்த ஒரு மொழியையும் மாணவர்கள் தாமாக விருப்பப்பட்டு படிக்க வேண்டுமே தவிர, யாராலும் திணிக்கப்படக் கூடாது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இந்தத் திடீர் முடிவு ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
எனவே, மத்திய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 -ஆம் வகுப்பு வரை 3-ஆவது மொழியைத் திணிக்கவோ, கட்டாயமாக்கவோ கூடாது.
மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டும்: இலங்கை அரசு தற்போது சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க மாட்டோம் என்று கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.