தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் 1.11 கோடி குடும்பங்கள் ஏமாற்றப்படுகின்றன :ராமதாஸ் குற்றச்சாட்டு!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு செயல்படுத்தப்படும் விதத்தால் 1.11 கோடி நுகர்வோருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எந்த பயனும் ஏற்படாது. அ.தி.மு.க. அரசு பிறப்பித்துள்ள ஆணைப்படி இரு மாதங்களுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆனால், அதற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்குத் தான் சிக்கல் ஏற்படும்.

உதாரணமாக, ஒரு வீட்டில் 2 மாதங்களுக்கு 600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுவதாக வைத்துக் கொள்வோம். அந்த வீட்டிற்கு இப்போது ரூ.2790 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டப்படி மொத்தப் பயன்பாட்டில் 100 யூனிட்டுகளை கழித்து விட்டு மீதமுள்ள 500 யூனிட்டுகளுக்கு ரூ.1330 கட்டணம் வசூலிக்கப் பட வேண்டும். இது தான் நேர்மையான நடை முறையாக இருக்கும். அவ்வாறு செய்யும் போது அக்குடும்பத்திற்கு ரூ.1460 மிச்சமாகும். ஆனால், அரசு அறிவித்துள்ள திட்டத்தின் படி மொத்தக்கட்டணமான 2790 ரூபாயில் 100 யூனிட்டுகளுக்கான கட்டணம் 350 ரூபாயை கழித்து விட்டு, மீதமுள்ள ரூ.2440 ரூபாயை செலுத்த வேண்டும்.RAMADOSS

இதனால் இத்திட்டப்படி அந்த குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய கட்டண சலுகையில் ரூ.1110 குறைகிறது. அதேபோல், ஒரு வீட்டில் இரு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால் இலவச மின்சாரத் திட்டத்தின் படி 100 யூனிட் கழித்து மீதமுள்ள 100 யூனிட்களுக்கு ரூ.120 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இப்போது ரூ. 233 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இப்போது ரூ.1030 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இலவச மின்சாரத்திட்டத்தின்படி இது 300 யூனிட் கட்டணமான ரூ.730 ஆக குறைக்கப்பட வேண்டும்; ஆனால் இது ரூ.830 ஆக மட்டுமே குறைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் 1.11 கோடி வீடுகளுக்கு பெரிய பயன் கிடைக்காது. ஏற்கனவே மீளமுடியாத கடன் சுமையில் சிக்கி, ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வட்டி செலுத்தி வரும் மின்சார வாரியத்தை மேலும் நலிவடையச் செய்யவே இத்திட்டம் வழிவகுக்கும். அதேநேரத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்து விட்டு, அதை முறையாக வழங்காமல் 1.11 கோடி குடும்பங்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments
Loading...