தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

15 வக்கீல்கள், 9 மாவட்ட நீதிபதிகள் ஐகோர்ட் நீதிபதிகளாக நியமனம்

15 வக்கீல்கள், 9 மாவட்ட நீதிபதிகள் ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Governmen

சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 38 நீதிபதிகள்தான் உள்ளனர். 37 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.  இந்த நிலையில், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து 19 வக்கீல்கள், 11 மாவட்ட முதன்மை நீதிபதிகள் என்று மொத்தம் 30 பேரின் பெயரை, ஐகோர்ட்டு நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரை செய்யப்பட்ட பெயர் பட்டியலை, கடந்த 4 மாதங்களுக்கு மேலாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான மூத்த நீதிபதிகள் ‘கொலீஜியம்’ பரிசீலனை செய்து வந்தது.  இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம், 30 பேரில் 24 பேரை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது 15 வக்கீல்கள், 9 மாவட்ட நீதிபதிகள் ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

 வக்கீல்கள் பவானி சுப்புராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எஸ்.சத்தியசந்திரன், ஜி.ஆர்.சுவாதிநாதன், அப்துல்குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு, வி.பார்த்திபன், ஆர்.சுப்பிரமணியம், எம்.கோவிந்தராஜ், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார், நிஷாபானு, எம்.எஸ்.ரமேஷ், அனிதாசுமந்த் ஆகியோரும், மாவட்ட முதன்மை நீதிபதிகள் ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி, டி.ரவீந்திரன், எஸ்.பாஸ்கரன், பி.வேல்முருகன், ஜி.ஜெயசந்திரன், சி.பி.கார்த்திகேயன், பஷீர்அகமது ஆகியோரும் புதிய நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.   இவர்களை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க, மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சகம் இந்த பரிந்துரையை விரைவில் பரிசீலித்து, இந்த 24 பேரையும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரை செய்யும். இந்த பரிந்துரையின் அடிப்படையில், 24 பேரையும் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பார்.

 இந்த நடவடிக்கைகள் அடுத்த சில நாட்களில் நடைபெறும் என்றும் புதிய நீதிபதிகள் 24 பேரும் ஆகஸ்டு 2–வது வாரத்தில் பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.  இந்த புதிய நீதிபதிகள் பதவி ஏற்பதை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டின்  நீதிபதிகளின் எண்ணிக்கை 62 ஆக உயரும். காலிப்பணியிடம் 13 ஆக குறையும்.

Comments
Loading...