Designed by Iniyas LTD
2014இல் 3 தற்கொலை அங்கிகள் 300 குண்டுகள் மீட்கப்பட்டது!
கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் மூன்று தற்கொலை அங்கிகள், 3000 குண்டுகள், 6 சயனைட்வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்படியென்றால் அக் காலகட்டத்திலும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருந்ததா? உளவுப் பிரிவினர் பலவீனமடைந்திருந்தனரா ? என ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கேள்வியெழுப்பியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கிலேயே தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற கட்டுக்கதை பரப்பப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்திருப்பதாவது,
நாட்டின் தேசிய பாதுகாப்பும், வடக்கில் தற்கொலை அங்கி மற்றும் ஆயுதம் கண்டுபிடிப்பு என்பதும் இருவேறு விடயங்களாகும். எனவே இதனை திரிபுபடுத்தி நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து என பிரசாரம் செய்து அரசுக்கு நெருக்கடியினை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
கடந்த ஆட்சிக்காலத்திலும் இவ்வாறான பெருந்தொகையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே எவரும் எதனையும் கூறமுடியாது. அவ்வாறானதொரு நிலைமை நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எவரையும் கடத்திச் சென்று தண்டனை வழங்குவதில்லை.
எனவே ஒவ்வொருவரும் தத்தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுகின்றனர். இன்றைய ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுவோர் கடந்த ஆட்சிக்காலத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் மௌனம் காக்கின்றனர் என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.