தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது பாமக – ராமதாஸ்

சட்டசபை தேர்தலில் பா.ம.க. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. முதல்–அமைச்சர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். தேர்தல் பிரசாரத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சி நடப்பதாகவும், துணை முதல்–அமைச்சர் பதவி மற்றும் அதிக தொகுதிகள் கொடுக்கப்போவதாகவும் பரபரப்பாக செய்திகள் வெளியானது.ramadass

இந்த தகவலை டாக்டர் ராமதாஸ் மறுத்தார். இதுபற்றி விக்ரவாண்டி சட்டசபை தொகுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் ராமதாஸ் கூறியவதாவது:– கடந்த 50 ஆண்டுகளில் 5 முறை கருணாநிதியும், 3 முறை எம்.ஜி.ஆரும், 3 முறை ஜெயலலிதாவும் முதல்–அமைச்சராக இருந்து உள்ளனர். இந்த முறை அன்புமணிக்கு இந்த வாய்ப்பை தரும்படி கேட்டு கொள்கிறேன். அப்போது தான். உங்களுடைய கஷ்டங்கள் தீரும். ஆட்சிக்கு வந்ததும் முழு மது விலக்குதான் முதல் கையெழுத்து என்று அன்புமணி கூறி இருக்கிறார்.

கருவில் இருக்கும் சிசு முதல் முதியவர் வரை அனைவருக்கும் இலவச மருத்துவ உதவி தருவோம் என்றும் சொல்லி இருக்கிறார். இப்போது ஒரு கட்சி (தி.மு.க.) பா.ம.க. வந்தால் துணை முதல்–அமைச்சர் பதவி தருவதாகவும் அதிக தொகுதிகள் தருவதாகவும் கூறி வதந்தியை பரப்பி விடுகிறார்கள். இந்த கூட்டத்தின் மூலம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். இது போன்ற கேவலமான வேலைகளில் ஈடுபடாதீர்கள். வேறு வேலை ஏதாவது இருந்தால் பாருங்கள். ராமதாசின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உங்கள் எண்ணம் நிறைவேறாது. பா.ம.க.வை அழித்து விடலாம் என கருதி அவர்கள் இப்படி செயல்படுகிறார்கள். பா.ம.க.வை அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள். இதுதான் வரலாறு. இவ்வாறு அவர் பேசினார்.

Comments
Loading...