Designed by Iniyas LTD
28 ஆண்டுகளுக்கு பிறகு பேட்மிண்டனில் பதக்கத்தை உறுதி செய்த இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மிண்டனில் இந்தியா 28 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறது.
பேட்மிண்டன் போட்டியில் மகளிர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தாய்லாந்தை சந்தித்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3–2 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால் 21–15, 17–21, 21–18 என்ற செட் கணக்கில் முன்னாள் உலக சம்பியனான ராட்சனோக்கையும், பி.வி.சிந்து 21–13, 21–15 என்ற நேர்செட்டில் போர்ன்டிப்பையும் தோற்கடித்தனர்.
அடுத்த ஒற்றையரில் இந்திய வீராங்கனை துளசியும், இரட்டையரில் சிக்கி ரெட்டி–பிரதன்யா காத்ரே ஜோடியும் தோற்றதால் போட்டி 2–2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.
இந்நிலையில் கடைசி இரட்டையரில் அஸ்வினி–சிந்து ஜோடி 21–16, 21–17 என்ற நேர்செட்டில் சப்சிரீ–சராலீ ஜோடியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது.
முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 3–0 என்ற கணக்கில் மக்காவ் அணியை விரட்டி இருந்தது.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியதால் இந்திய மகளிர் அணி வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தது. ஆசிய விளையாட்டில் பேட்மிண்டனில் இந்திய அணி பதக்கம் வெல்ல இருப்பது 28 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.
இதற்கு முன்பு கடைசியாக 1986ம் ஆண்டில் இந்திய ஆடவர் அணி வெண்கலப்பதக்கம் வென்று இருந்தது.
ஆடவர் அணிகள் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 0–3 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வி கண்டு வெளியேறியது. இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் கிடாம்பி, காஷ்யாப் ஆகியோர் தங்கள் ஒற்றையர் ஆட்டத்தில் தோல்வி கண்டனர்.