Designed by Iniyas LTD
29 நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம்!
யுத்தகால துன்பங்கள் இன்றும் தீர்ந்தபாடில்லை 29 நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் நிறைவடைகின்ற போதிலும் அன்று அனுபவித்த துன்பங்கள் இன்றும் தொடர்வதாக முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கேப்பாபுலவில் இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ள கேப்பாபுலவு மக்கள், நல்லாட்சி அரசாங்கத்திடம் தொடர்ந்தும் மன்றாடிக்கொண்டிருக்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
கேப்பாபுலவு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட புலவுக்குடியிருப்பு, சீனியாமோட்டை, சூரிபுரம் உள்ளிட்ட சொந்த நிலத்தை தொடர் போராட்டம் மூலம் அப்பகுதி மக்கள் பெற்றுக்கொண்டதை அடுத்து தமது பூர்வீக காணிகளை மீட்பதற்கான போராட்டத்தை கேப்பாபுலவு மக்களும் ஆரம்பித்திருந்தனர்.
29 ஆவது நாளாக இன்றும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள கேப்பாபுலவு மக்கள், தமது தாய் நிலைத்தை மாத்திரமே கேட்பதாக குறிப்பிடுகின்றனர்.
அரசாங்கத்தின் சொத்துக்களை தாம் கேட்கவில்லை என தெரிவிக்கும் மக்கள் தொடர்ச்சியாக தாம் அரசாங்கத்திடம் பூர்வீக காணிக்காக மன்றாடப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
காணிக்குள் கால் பதிக்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் கேப்பாபுலவு மக்கள் உறுதிப்படத் தெரிவித்துள்ளனர்.
சண்முகம் தவசீலன்


