Designed by Iniyas LTD
3 பில்லியன் அமெ-டொலர் கடனை வழங்கியது ஆசிய வங்கி!
இலங்கையில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அமெரிக்க டொலர் 3 பில்லியன் நிதி உதவியை சலுகை அடிப்படையிலான வட்டி வீதத்தில் வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்வரும் (2017, 2018, 2019) மூன்று வருடங்களுக்காக சலுகை அடிப்படையிலான வட்டி வீதத்தின் கீழ் அமெரிக்க டொலர் 3பில்லியன் நிதி உதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரித்துள்ளது.
கடந்த 2ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை ஜேர்மன் பிராங்பர்ட் நகரில் இடம்பெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 49ஆவது நிதி அமைச்சர்களின் வருடாந்த மாநாட்டிலேயே இந்த இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவி புதிய புகையிரத கடவை, துறைமுக அபிவிருத்தி, மின் உற்பத்தி வழிகளை முன்னேற்றுதல், நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து திட்டத்தை அபிவிருத்தி செய்தல் போன்றவைக்கு பயன்படுத்தப்படும்.
பொதுவாக ஆசிய அபிவிருத்தி வங்கி வருடாந்தம் இலங்கைக்கு அமெரிக்கடொலர் 400க்கும் 500 மில்லியனுக்கும் இடைப்பட்ட நிதி உதவியை பெற்றுக்கொடுக்கின்றது. என்றாலும் தற்போது கிடைக்கவிருக்கும் இந்த நிதி உதவி இதற்கு மேலதிகமானது என்பது மேலும் ஒரு விசேட அம்சமாகும். அத்துடன் சாதாரண மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் வியாபார நடவடிக்கைகளை மேலோங்கச் செய்வதற்காக அமெரிக்கடொலர் 200 மில்லியனை மேலதிகமாக வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.