Designed by Iniyas LTD
350 மில்லியன் ரூபாவை சிறிலங்காவுக்கு வழங்குகிறது அமெரிக்கா
வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு, அமெரிக்கா 350 மில்லியன் ரூபாவை மனிதாபிமான கொடையாக வழங்கியுள்ளது.
இந்த உதவிக் கொடை பாதுகாப்பாக குடிநீர், சுகாதாரக் கருவிகள், அவசர தங்குமிடப் பொருட்கள், வீடுகளை பழுதுபார்க்கும் தொகுதிகள், தொற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பதற்கான சுகாதார சேவை என்பனவற்றுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இந்த உதவி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதுவர், தேவைப்படும் போதெல்லாம் அமெரிக்க மக்களும் சிறிலங்கா மக்களும், எப்போதும் அருகருகே நிற்பார்கள் என்று கூறினார்.
யுஎஸ்எய்ட் அமைப்பின் ஒரு அங்கமான வெளிநாட்டு அனர்த்த உதவிக்கான அமெரிக்க பணியகம் ஊடாக இந்த உதவி வழங்கப்படவுள்ளது.
2001ஆம் ஆண்டில் இருந்து இந்தப்பணியத்தின் ஊடாக சிறிலங்காவுக்கு அனர்தத உதவிகளாக 19 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிறிலங்காவுக்கு இரண்டு வாரகாலப் பயணமாக வந்துள்ள அமெரிக்க இராணுவத்தின் பயிற்சி அதிகாரிகள் குழு, களுத்துறையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி மற்றும் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டது.