Designed by Iniyas LTD
4 மாகாணங்களில் அபார வெற்றி பெற்றார் ஹிலாரி
அமெரிக்காவில் நவம்பர் 8–ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. அங்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் நடந்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. நேற்று முன்தினம் (15–ந் தேதி) ஒரே நாளில் 5 மாகாணங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் நடந்தன.
உடனடியாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் முன்னணியில் உள்ள முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் புளோரிடா, ஓஹியோ, இல்லினாய்ஸ், வடக்கு கரோலினா ஆகிய 4 மாகாணங்களில் அபார வெற்றி பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் முன்னிலையில் உள்ள கோடீசுவரர் டொனால்டு டிரம்ப், புளோரிடா, இல்லினாய்ஸ், வடக்கு கரோலினா ஆகிய 3 மாகாணங்களில் வெற்றி பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் அவர் ஓஹியோ மாகாணத்தில் தோல்வியை தழுவினார்.
அங்கு ஜான் காசிச் வெற்றி பெற்றார். மிசவுரி மாகாணத்தில் நடந்த இரு கட்சி வேட்பாளர் தேர்தலில் முடிவு வெளிவரவில்லை. குடியரசு கட்சி வேட்பாளர் களத்தில் இருந்து வந்த மார்க்கோ ரூபியோ தனது சொந்த மாகாணமான புளோரிடாவில் டிரம்பிடம் தோல்வியை தழுவினார். அத்துடன் அவர் தேர்தல் களத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். தற்போதைய நிலவரப்படி பிரதிநிதிகள் வாக்குகளை பொறுத்தமட்டில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆவதற்கு 2,383 ஓட்டுக்கள் தேவைப்படுகிற நிலையில் ஹிலாரி கிளிண்டன் 1,561 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் ஆவதற்கு 1,237 பிரதிநிதிகள் வாக்குகள் தேவைப்படுகிற நிலையில் டொனால்டு டிரம்ப் 621 வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார்.