தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

500வது நாளை கடந்துள்ள காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி வேண்டிய போராட்டத்திற்கு ஆதரவளித்து பிரித்தானியாவில் போராட்டம்!

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி வேண்டி 500 வது நாளாக இலங்கையில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

பிரித்தானியப் பிரதமர் இல்லத்திற்கு முன்பாக 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

பிரித்தானியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

போராட்டத்தில் பங்கு பெற்ற இரட்ணவேல் பிரசன்னா என்பவர் கூறும்போது, இறுதி யுத்தத்தின் கடைசி நாட்களில் இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது அன்பானவர்களுக்கான பதில் வேண்டி 500 வது நாளாக கிளிநொச்சியில் உறவுகள் போராடிவருகிறார்கள்.

ஆனால் பதிலளிக்க வேண்டிய நல்லாட்சி அரசோ சர்வதேசமோ எந்தப்பதிலும் அழிக்காமல் மௌனிகளாக இருக்கிறார்கள்.

இந்தவேளையில் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய நாம் அவர்களோடு தோளோடு தோள் நிற்பது தார்மீகக் கடமையாகும். எமக்கு நடந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என சூளுரைத்தார். அநேகமாக இளைஞர்களின் ஒலியும் இதுவாகவே அமைந்திருந்தது.

இவ்வேளை, அண்மையில்ஐக்கிய நாடுகள் சபையினால், உலகின் முக்கியமான ,உடனடியாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயங்களின் பட்டியலில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்மந்தமான விடயமும் உள்ளடக்கப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...