Designed by Iniyas LTD
63-வது ஓவரில் சதம் கடந்தார் ஹோலி
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது அமித் மிஸ்ராவுக்குப் பதில் ஜெய்ந்த் யாதவ் அறிமுகமாகியிருக்கிறார்.
கவுதம் காம்பீர் நீக்கப்பட்டு ஆடும் லெவனில் லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், துவக்க வீரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 5 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு துவக்க வீரர் முரளி விஜய் 4 பவுண்டரி உள்பட 20 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார். இதனால், இந்திய அணி 22 ரன்களுக்குள் துவக்க ஜோடியை இழந்தது. அதன்பின்னர் புஜாரா-கோலி இணைந்தனர். இவர்கள் இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.
இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த இருவரும் சதம் அடித்து அசத்தினர். புஜாரா 60-வது ஓவரில் சிக்சர் அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார். 184 பந்துகளில் 11 பவுண்டரி 2 சிக்சர்களுடன் இந்த இலக்கை எட்டினார். இதன்மூலம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் சதம் அடித்துள்ளார். இதேபோல் கேப்டன் கோலி, 63-வது ஓவரில் சதம் கடந்தார். அவர், 154 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகளுடன் சதம் அடித்துள்ளார். அவருக்கு இது 14-வது டெஸ்ட் சதமாகும்.