தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

8 நாள் போராட்டம்: மெரினாவில் இறுதியாக போராடியவர்கள் இரவில் வெளியேற்றம்

jalli strikeசென்னை மெரினாவில் நீடித்த 8 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியாக போராடிய ஒரு சிலர் நேற்று இரவு வெளியேறினார்கள்.

அவசர சட்டம் 

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை தடை செய்யக்கோரியும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழகம் முழுவதும் ஒரு வாரமாக போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்ததுடன், சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தார்.

இந்த சட்டம் தற்காலிகமானது, எங்களுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்று கூறி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

வன்முறை 

இந்நிலையில் இந்த போராட்டம் மாற்று பாதையில் செல்வதால் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இதனால் நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தியவர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது சிலர் கற்களை வீசியதால் போராட்டம் வன்முறையில் முடிந்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே போராட்ட குழுவை சேர்ந்த ஒரு பகுதியினர் கடல் பகுதிக்கு ஓடி சென்றனர். அவர்கள் அங்கேயே நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை 

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்று பலரும் கலைந்து சென்றனர். எனினும் ஒரு சிலர், அவசர சட்டத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்ட மசோதா நகலை காட்டினால் தான் கலைந்து செல்வோம் என்று கூறி கடல் அருகே நின்று கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களிடம் நேற்று மயிலாப்பூர் துணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் பற்றி விளக்கி கூறினார்.

அப்போது அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், தங்களை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

முடிவுக்கு வந்தது 

அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக துணை கமி‌ஷனர் கூறியதையடுத்து இறுதியாக போராடியவர்கள் நேற்று இரவு அங்கிருந்து வெளியேறினார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல மாநகர பஸ் மூலம் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து மெரினாவில் நீடித்த 8 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

 

Comments
Loading...