தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

9 மாநிலங்களுக்கு விரைவில் புதிய கவர்னர்கள் நியமனம்

காங்கிரஸ் ஆட்சி செய்யும் 5 மாநிலங்கள் உள்பட 9 மாநிலங்களுக்கு விரைவில் புதிய கவர்னர்களை நியமிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் அசாம், இமாசலபிரதேசம், மேகாலயா, மிசோரம், மணிப்பூர், ஐக்கிய ஜனதாதள ஆட்சி நடைபெறும் பீகார், இடதுசாரி கட்சிகளின் ஆட்சி நடைபெறும் திரிபுரா, தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடைபெறும் தெலுங்கானா, அகாலிதளம்–பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கவர்னர் பதவி காலியாக உள்ளது. புதுச்சேரியிலும் கவர்னர் பதவி காலியாக இருக்கிறது.

இதனால் அண்டை மாநில கவர்னர்கள், சில மாநில கவர்னர் பொறுப்புகளை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்கள். மேற்கு வங்காள கவர்னர் கேசரிநாத் திரிபாதி பீகார், மேகாலயா, மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் கவர்னர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். நாகலாந்து மாநில கவர்னர் பத்மநாப ஆச்சார்யா அசாம், திரிபுரா மாநிலங்களின் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.govetment-of-india

அரியானா கவர்னர் கேப்டன் சிங் சோலங்கி பஞ்சாப் மாநிலம் மற்றும் சண்டிகார் யூனியன் பிரதேச பொறுப்பையும், ராஜஸ்தான் கவர்னர் இமாசலபிரதேச பொறுப்பையும், உத்தரகாண்ட் கவர்னர் கே.கே.பால் மணிப்பூர் மாநில பொறுப்பையும், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்ட இ.எஸ்.எல்.நரசிம்மன் தெலுங்கானா பொறுப்பையும், அந்தமான் கவர்னர் அஜய்குமார் சிங் புதுச்சேரி பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்கள். எனவே கவர்னர் பதவி காலியாக இருக்கும் மேற்கண்ட 9 மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரைவில் புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட கவர்னர்கள் கே.ரோசய்யா (தமிழ்நாடு), எஸ்.சி.ஜமீர் (ஒடிசா), ராம்நரேஷ் யாதவ் (மத்தியபிரதேசம்), சையது அகமது (ஜார்கண்ட்), என்.என்.வோரா (காஷ்மீர்), சீனிவாஸ் தாதாசாகிப் பட்டீல் (சிக்கிம்), இ.எஸ்.எல்.நரசிம்மன் (ஆந்திரா மற்றும் தெலுங்கானா), நிர்பய் சர்மா (அருணாசல பிரதேசம்), கே.கே.பால் (உத்தரகாண்ட்) ஆகியோர் தொடர்ந்து தங்கள் பதவியில் நீடித்து வருகிறார்கள். இதேபோல் டெல்லி மாநில கவர்னர் நஜீப் ஜங், அந்தமான் கவர்னர் அஜய்குமார் சிங்கும் பதவியில் நீடித்து வருகிறார்கள்.

Comments
Loading...