தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் மக்களுக்கு மகிந்த ராஜபக்ச தீர்வு தருவாரா?- சி.வி.கே.சிவஞானம் கேள்வி

தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்குவேன் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் வழங்கப் போகும் தீர்வு என்ன என்பதைத் தெளிவாகக் கூறவேண்டும். தாம் வழங்க கூடிய தீர்வுத் திட்டம் என்ன என்பதை அவர் அப்போதும் கூறவில்லை. இப்போதும் தெளிவாகக் கூறவில்லை என்று வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார் .

அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே குழப்பியது என மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்துத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மகிந்த, கூட்டமைப்புத்தான் தீர்வுத் திட்டத்தைக் குழப்பியது என்று கூறுவது அரசியல் சந்தர்ப்பவாதக் கருத்தாகும். ஏனெனில் மகிந்தவுடன் கூட்டமைப்புக் குறைந்தது 18 தடவைகள் தீர்வு விடயம் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியது. அதில் சுமூகமான தீர்வு வழங்க மகிந்த முன்வரவில்லை. இலங்கையில் உள்நாட்டுப் போர் மௌனிக்கப்பட்ட பின்னர் மிகவும் அற்புதமான வாய்ப்புக்கள் இருந்தன. அன்றைய காலத்தில் மகிந்தவுக்கு அதிகாரமும் பலமும் சாதகமாக இருந்தது. அதனை பயன்படுத்தாமல் 13 பிளஸ் என்று கூறிக் கொண்டிருந்தவர் தற்போது 13 மைனஸில் பேசிக் கொண்டிருக்கிறார்.

அரசியல் தீர்வு தொடர்பில் மகிந்தவின் நிலைப்பாடு இப்படித்தான் உள்ளது. இவ்வாறான நிலையில் தீர்வு கிடைக்காமைக்கு கூட்டமைப்புத்தான் முழுப் பொறுப்பு என்று கூறுவது பொருத்தமற்றது. அவரால் வழங்கக்கூடிய தீர்வு என்ன என்பதை தெளிவாக அதிகாரத்தில் இருந்த போதும் கூறவில்லை தற்போதும் கூறவில்லை. தற்போதுகூட தெளிவாகக் கூறுவாராயின் அதனைக் கூட்டமைப்பு பரிசீலிக்கும் என்றார்.

Comments
Loading...