Designed by Iniyas LTD
யாழில் அதிகரிக்கும் வழிப்பறி கொள்ளைகளை கண்டுகொள்ளாத காவல்துறை : மக்கள் கவலை
யாழ்ப்பாணம் வழுக்கையாற்றுப் பகுதியில் வழிப்பறிக்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலைவெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டைச் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டைச் சந்திவரை செல்லும் வீதியில் உள்ள வழுக்கையாற்றுப் பகுதியில் இவ்வாறு தொடர்ச்சியாக வழிப்பறிக்கொள்ளைகள் இடம்பெறுகின்றன.
குறித்த வீதியில் நிலைகொண்டிருக்கும் கொள்ளையர்கள் வீதியால் செல்பவர்களை வழிமறித்து, நிறுத்தி பணம், நகைகளைப் பறிக்க முற்படுகின்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த இரண்டு நாட்களின் முன்னர் காலை தனிமையில் வந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி, தாலிக்கொடி என்பன கொல்ளையர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்தபோதும், இழந்த நகைகளையோ, பணத்தையோ? காவல்துறை மீட்டுக்கொடுக்கவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வீதியூடாக செல்வதற்கு மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த வீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலோ, அல்லது மக்களுக்கான பாதுகாப்பிலோ காவல்துறை ஈடுபடாதது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் நேற்றுமுன்தினம் வட்டுக்கோட்டைப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி உந்துருளியில் பயணித்த பெண்ணை துரத்திச் சென்று அவர் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் சங்கிலியை அறுத்துள்ள நிலையில், அந்தப் பெண்ணின் கழுத்துப் பகுதி காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.