தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஓ.எம்.பி அலுவலக இயலாமையை நிரூபிக்க ஐந்து வழக்குகளை சமர்ப்பித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள்

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP ஓ.எம்.பி) இயலாமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஐந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தீர்வை வழங்குமாறு குறித்த அலுவலகத்துடன் தாம் உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் 8 மாவட்டச் சங்கங்கள் ஒருமித்து தெரிவித்துள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி நேற்று முந்தினம் வடக்கில் ஓமந்தை மற்றும் கிழக்கில் கல்முனை ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டப் பேரணியின் போது தமது வாசிக்கப்பட்ட வலியுறுத்தல் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முழு வடிவம் வருமாறு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் கடந்த 922 நாட்களாக எமது உறவுகளின் நிலையை அறிவிக்க கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம். இலங்கை அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இராணுவத்தாலும் ஒட்டுக்குழுக்களினாலும் உதாரணமாக பல்வேறு வகைகளில் வெள்ளை வேன் கடத்தல்கள், கைதுகள், என எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

2009 மே காலப்பகுதியில் அரச கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் இறுதி யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து அரசாங்கம் ஒருநாளெனும் அடிப்படையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களையும், அவர்களுக்கு உதவியவர்களையும், அவர்களுடைய அமைப்புகளில் வேலை செய்தவர்களையும் சரணடையுமாறு ஒலிபெருக்கி வாயிலாக அறிவித்தது. சரணடையும் கட்டத்தில் அவர்களை விசாரணை செய்தோ அல்லது புனர்வாழ்வளித்தோ விடுதலை செய்வதாக உத்தரவாதமளித்தது.

அரசினதும் அரச படைகளினதும் வாக்குறுதிகளை நம்பி நாம் எமது உறவுகளை முன்னரங்க காவலரணங்களிலும் சோதனைச்சாவடிகளிலும் நின்ற படையதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்தோம். பலர் தாமாகவே அவர்களிடம் சரணடைந்தார்கள். சிலர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டார்கள். சிலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருகையில் கூட்டிச் செல்லப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள். எமது கைகளாலேயே இலங்கை இராணுவத்திடம் எமது உறவுகளை கையளித்த நாம் இவற்றுக்கெல்லாம் கண்கண்ட சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எம்முடன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட (53) தாய் தந்தையர்கள் மன உளைச்சல் ஏற்பட்டு, மாரடைப்பு காரணமாகவும், அதையொத்த நோய்களினாலும் இறந்து விட்டார்கள். இறப்பின் பின்னர் அவர்களின் உறவுகளை தேட யாருமற்ற நிலை காணப்படுகின்றது. இறுதியாக இருந்து போராடும் நாங்கள் கூட உடல் வலிமையை நாளுக்குநாள் இழந்து, எமது நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றோம். எமது உறவுகளை நாம் குடும்பமாக ஒப்படைத்தோம். சிலர் குடும்பமாக சரணடைந்தனர், அப்படிச் சரணடைந்தவர்களில் கைக் குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள் பலர் அடங்குகின்றார்கள். இவர்கள் அனைவருயும் கேட்டே நாம் போராடிவருகிறோம். இதுவரை போராடி இறந்த தாய்மார்கள் போல் நாமும் இறந்தால் எமது உறவுகளை தேட யாரும் இருக்க மாட்டார்கள் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது.

தற்போதைய அரசியல் சூழலில் ஆட்சிமாற்றம் ஏறபடக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகிறது. அந்நிலை ஏற்பட்டால் எமது உறவுகள் காணாமல் ஆக்கப்படுவதற்கு காரணமானவர்களினால் போராட்டத்தில் இருந்த நாமும் காணாமல ஆக்கப்பட்டலாம். எனவே ஆட்சி மாற்றங்கள் ஏற்படமுன் எமது உறவுகளை தேடித்தர சர்வதேசமும், ஐநாவும் முன்வர வேண்டும். எமக்கு நீதியை வழங்க தயாரில்லாத சிங்கள அரசு ஐநாவின் பிரேரணையின்படி அமைக்கப்பட்ட செயலணியின் பரிந்துரைகளை புறம்தள்ளி தான்தோன்றித்தனமான அலுவலகத்தை அமைத்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் தேவைகள், விருப்பங்களை கவனத்தில் கொள்ளாமல் உருவாக்கப்பட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இயலாமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் 16.05.2019 அன்று குறித்த அலுவலக அதிகாரிகளை சந்தித்து நாம் உறுதியான ஆதாரங்களுடன் ஐந்து காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்குகளை அவர்களுக்கு கையளிப்போம். அதற்கு விரைவில் தீர்வு வழங்கி எமக்கு நம்பிக்கை தர வேண்டும் என்ற உடன்பாட்டை மேற்கொண்டோம்.

அதன்படி 20.07.2019 அன்று ஐந்து வழக்குகளுக்குரிய ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளோம். இதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஓ.எம்.பி யிடமே (கா.போ.ஆ.ப.அ) காணப்படுகின்றது. எனவே சர்வதேச சமூகம் இனியும் ஓஎம்பியை தினிக்காது இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களது பொறுப்பை நிறைவேற்றச் செய்ய வேண்டிய தார்மீகப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேற்படி எம்மால் வழங்கபபட்ட ஐந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்குரிய முடிவை அறிவிக்கும் வரை. ஓஎம்பி அலுவலகத்தை மாவட்டங்கள் தோரும் அமைக்க மறைமுகமாக கபடத்தனத்துடன் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்க முயற்சிக்காஅனுமதிகாக கூடாது.

நீதி கேட்டு போராடி இறந்து கொண்டிருக்கும் நாங்கள் 922 நாட்களாக வீதியில் இருக்கும் போது நீதிக்கான பொறிமுறையை ஏற்படுத்தாத சிங்கள அரசு இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகத்தை உருவாக்க லேண்டிய தேவை என்ன?. எமது உறவுகளுக்கு நீதியே வேண்டும் நிதி அல்ல என்பதை இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகிறோம். ஓஎம்பியானது இதுவரை வந்து போன ஆணைக்குழுக்கள் போன்ற ஒன்றுதான் உருப்படியாக எதையும் செய்ய இயலாத ஒன்று. எமக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டுமானால் சர்வதேச விசாரணைத் தலையீட்டுடன் கூடிய பொறிமுறை மூலம் மட்டும் கிடைக்கும். காலம் கடந்த நீதி மறுப்பட்ட நீதியே என்றுள்ளது.


Comments
Loading...