Designed by Iniyas LTD
நிலக்கரி சுரங்கங்களுக்கு ஒதுக்கீடு இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை தருகிறது
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் சட்டவிரோதமானவை என்கிற தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதற்கு வேறு என்னென்ன வழிகள் இருக்கிறதோ அதை ஆராய்ந்து விரைவில் முறையிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிலக்கரி மற்றும் மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். அவ்வாறு செய்யவில்லை என்றால், வெளிநாட்டில் இருந்து தொடர்ந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய போது பியூஷ் கோயல் இதனை தெரிவித்தார். நிலக்கரி சுரங்கங்களுக்கு ஒதுக்கீடு அனுமதி வழங்கும் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வந்தாலும், இந்திய பொருளாதாரத்திற்கு இது மிகப் பெரிய பங்களிப்பை தருகிறது என்றும் அவர் கூறினார். எனவே, நாட்டின் பொருளாதாரம் விரைவாக முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட, இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1993-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 218 நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டு அனுமதிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த நிலக்கரிச் சுரங்கங்கள் அனைத்தும் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலங்களில் வழங்கப்பட்டவையாகும்.