தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கேப் கோப்ராஸ் அணியை வீழ்த்தியது நார்தன் அணி

6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 4 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா), பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (ஆஸ்திரேலியா), டால்பின்ஸ் (தென்ஆப்பிரிக்கா), லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இந்தியா), ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (ஆஸ்திரேலியா), கேப் கோப்ராஸ் (தென்ஆப்பிரிக்கா), பார்படோஸ் டிரைடென்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் (நியூசிலாந்து) ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன்தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.

Mumbai-Indians-vs-Lahore-Lions-match-previewஇந்த நிலையில் நேற்றிரவு ராய்ப்பூரில் நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தின் நார்தன் டிஸ்ட்ரிக்சும், தென்ஆப்பிரிக்காவின் கேப் கோப்ராசும் மோதின. டாஸ் ஜெயித்த கேப் கோப்ராஸ் முதலில் நார்தன் அணியை பேட் செய்ய அழைத்தது.

இதன்படி ஆன்டன் டேவ்சிச்சும், கனே வில்லியம்சனும் நார்தன் அணியின் இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக ஆடிய இவர்கள் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர். நங்கூரம் போல் நிலைத்து நின்று நாலாபுறமும் பந்தை விரட்டிய இந்த ஜோடியை பிரிக்க கேப் கோப்ராஸ் கேப்டன் ஆன்டாங் 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் உடனடி பலன் கிடைக்கவில்லை. 10.3 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை கடந்தது.

ஸ்கோர் 140 ரன்களாக உயர்ந்த போது, தொடக்க ஜோடி ரன்-அவுட்டில் பிரிந்தது. டேவ்சிச் 67 ரன்களில் (46 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.அடுத்து வந்த கேப்டன் டேனியல் பிளைன் டக்-அவுட் ஆனாலும், அவருக்கு பிறகு இறங்கிய வாட்லிங் பின்னியெடுத்தார். மறுமுனையில் கனே வில்லியம்சனும், கோப்ராசின் பந்து வீச்சை சிதைக்க ஸ்கோர் 200 ரன்களை நோக்கி நகர்ந்தது. வாட்லிங் 32 ரன்னிலும் (3 பவுண்டரி, ஒரு சிக்சர்), கடைசி கட்டத்தில் ஆட வந்த ஸ்டைரிஸ், மிட்செல் ரன் ஏதுமின்றியும் பெவிலியன் திரும்பினர்.

இதற்கிடையே சதத்தை நெருங்கிய கனே வில்லியம்சன், கடைசி ஓவரில் சிக்சர் அடித்து தனது முதலாவது சதத்தை 48 பந்துகளில் பூர்த்தி செய்தார். வில்லியம்சின் சதத்தின் உதவியுடன் நார்தன் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஓர் அணி 200 ரன்களை தாண்டியது இதுவே முதல் முறையாகும். வில்லியம்சன் 101 ரன்களுடன் (49 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) களத்தில் இருந்தார்.

அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய கேப் கோப்ராஸ் அணி 7.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்திருந்த பலத்த மழை கொட்டியது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி முடிவு கடைபிடிக்கப்பட்டது. 7.2 ஓவரில் கேப் கோப்ராஸ் 77 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். இதன் அடிப்படையில் 33 ரன்கள் வித்தியாசத்தில் நார்தன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Comments
Loading...