Designed by Iniyas LTD
விசாரணை அதிகாரிகளை மிரட்டும் ஐஎஸ்ஐ உளவாளி அருண் செல்வராசன்
விசாரணை என்ற பெயரில் என்னை சித்ரவதை செய்தால், அதற்கான பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று ஐஎஸ்ஐ உளவாளி செல்வராசன் கூறியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் தங்கியிருந்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி அருண் செல்வராசன், கடந்த 10ம் தேதி தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இலங்கையை சேர்ந்த இவர் சென்னையில் 5 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் ஊடுருவி தகவல்களை சேகரித்து பாகிஸ்தானுக்கு அனுப்பிய அதிர்ச்சிகரமான தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியானது. அவரை கடந்த 18ம் தேதி 6 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர். தேசிய புலனாய்வு அதிகாரிகளின் கேள்விகளுக்கு எந்த பதிலையும் அவர் கூறவில்லை.
ஆனால், விசாரணைக்காக சித்ரவதை செய்தால் அதற்குரிய பலன்களை அனுபவிப்பீர்கள் என்று மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். பதற்றமே இல்லாமல் அருண் செல்வராசன் இருப்பதாகவும் விசாரணைக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். இதனால் செல்வராசனை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்கும் முடிவில் உள்ளனர். தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள ரகசிய தகவல்கள்படி அருண் செல்வராசனின் தொடர்பில் 2000 பேர் இருந்துள்ளனர். அனைவருடனும் செல்வராசன் நெருக்கம் காட்டி உள்ளார். அவர்களில் சிலரை பகடைக்காயாக பயன்படுத்தி தனது உளவு வேலையை செய்துள்ளார். இன்னும் சிலரிடம் பணம் கொடுத்து தனது பணியை முடித்துள்ளார். அருண் செல்வராசனின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களின் நடமாட்டத்தை உளவு பிரிவு போலீ சார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.