Designed by Iniyas LTD
நகை பறிப்புச் சம்பவங்களின் பின்னணியில் பிரதேச அமைச்சர்கள்
நீர்கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் மற்றும் நகை பறிப்புச் சம்பவங்களின் பின்னணியில் பிரதேச அமைச்சர்களின் ஆதரவு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீர்கொழும்பில் அண்மைக்காலமாக தமிழ் வர்த்தகர்கள் மட்டுமன்றி பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவதும், பொதுமக்கள் நடமாடும் இடங்களில் கூட பெண்களின் அணிந்திருக்கும் நகைகள் சர்வசாதாரணமாக பறித்துச் செல்லப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.
இது தொடர்பாக கொழும்பு ருடே செய்தி இணையத்தளம் ஒரு மாதத்திற்கு முன்னரே செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.இதனையடுத்து திவயின சிங்கள பத்திரிகை இது தொடர்பான புலனாய்வுச் செய்தியொன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தியில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுவினர் நன்றாக கட்டமைக்கப்பட்ட ஒரு குழுவினர் என்ற தகவல் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொழும்பு ருடே இணையத்தளம் குறிப்பிட்டிருந்தது போன்று கொள்ளைக்காரர்கள் தொடர்பான தெளிவான தகவல்களை திவயின பத்திரிகை வெளியிடவில்லை.
அதற்குப் பதிலாக நீர்கொழும்பு அச்சுறுத்தல்கள் மற்றும் கொள்ளைகளின் பின்னணியில் கோட்பாதர்மார்கள் இருப்பதாக மட்டும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பைப் பொறுத்தவரை கோட்பாதர்கள் என்போர் பிரதியமைச்சர் சரத் குணரத்தின மற்றும் மாகாண அமைச்சர் நிமல் லான்சா ஆகியோர் என்பது அனைவருககும் தெரிந்த பகிரங்க ரகசியமாகும்.
இந்நிலையில் தமிழ் மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் பின்னணியில் பிரதேச அமைச்சர்கள் இருப்பது திவயின செய்தியின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.