தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டிராவில் முடிந்த சென்னை–புனே அணிகளின் ஆட்டம்

இந்தியன் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த சென்னை–புனே அணிகள் இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.ChennaiPune-

கால்பந்து போட்டி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் இரண்டு முறை மோத வேண்டும்.

இந்த நிலையில் புனேயில் நேற்றிரவு நடந்த 28–வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.–எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதின. ஆட்டத்தின் 9–வது நிமிடத்தில் புனே வீரர் இஸ்ரெயில் குருங் வலது பக்கத்தில் நீண்ட தூரத்தில் இருந்து தூக்கியடித்த ஷாட்டை, கோல் பகுதியில் நின்ற புனேயின் முன்னணி வீரர் கோஸ்டாஸ் கேட்சோரனிஸ் கோலுக்கு திருப்பினார்.

இலனோ சொதப்பல்

16–வது நிமிடத்தில் சமன் செய்ய சென்னை அணிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. சென்னை வீரர் மெட்டராசியை புனேயின் மாக்லியோக் பிடித்து இழுத்து ‘பவுல்’ செய்தார். இதனால் மாக்லியோக் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டதுடன், சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. பிரீகிக் மற்றும் பெனால்டியை கோலாக்குவதில் வல்லவரான சென்னையின் நட்சத்திர வீரர் இலனோ புளுமர் பெனால்டியை உதைக்க வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக பந்தை கோல்கம்பத்தின் வலப்புற வெளியே அடித்து விட்டு பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டார். இந்த தொடரில் வீணடிக்கப்பட்ட முதல் பெனால்டி இது தான்.

இதுவரை ஆடியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் (8 கோல்) கோல் அடித்து முன்னிலை வகிக்கும் இலனோ செய்த தவறால் சென்னை அணிக்கு நெருக்கடி அதிகமானது.

டிரா ஆனது

பிற்பாதியில், 59–வது நிமிடத்தில் பல்வந்த்சிங் தட்டிக் கொடுத்த பந்தை சென்னை வீரர் வலேன்சியா மென்டோசா (கொலம்பியா நாட்டவர்) கோலாக மாற்றி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் சென்னை அணி ஆதிக்கம் (57 சதவீதம்) செலுத்திய போதிலும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.

முடிவில் ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 7–வது லீக்கில் ஆடிய சென்னை அணி 3 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் தொடருகிறது. புனே அணி 3 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி என்று 11 புள்ளிகளுடன் 3–வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது

இன்றிரவு 7 மணிக்கு கொச்சியில் நடக்கும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்–மும்பை சிட்டி அணிகள் சந்திக்கின்றன.

Comments
Loading...