தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெற்றிலைக்கேணியில் 700 ஏக்கர் நிலம் படையினரால் சுவீகரிப்பு

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் கடற்படைத் தளமொன்றை அமைப்பதற்கான, காணி அளவைப் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுதி கிராம அலுவலரது எதிர்ப்பினையும் தாண்டி இன்று நில அளவீடு இடம்பெற்றுள்ளது. நேற்று அளவீடு செய்யப்பட்ட 700 ஏக்கர் நிலத்தை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்து வெளியிடப்படுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.-Sinhala-Military

வடக்கில் முப்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்க ஏதுவாக நில அளவை மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெற்றிருந்தது. எனினும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளது கடுமையான எதிர்ப்புக்களையடுத்து பல தடவைகள் இம்முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுவரை காலமும் யாழ்.மாவட்ட நில அளவைத் திணைக்கள ஆணையாளராக இருந்த தமிழரான அதிகாரி மாரடைப்பினால் அண்மையில் உயிரிழந்ததை அடுத்து, அவசர அவசரமாக தென்னிலங்கையிலிருந்து சிங்களவரான அதிகாரியொருவர் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்து வரும் இருமாத காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அவர் தனது பதவி காலத்தினுள் முழுமையாக அளவீடுகளினை பூரணப்படுத்தி சுவீகரிப்பிற்கான வர்த்தமானி அறிவிப்பினை விடுக்க ஏற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்ளுர் பணியாளர்களினை புறந்தள்ளி முழுவதுமாக தென்னிலங்கையிலிருந்து சிங்கள பணியாளர்களே அளவீட்டு பணிகளிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர்களே அளவீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அளவீடு தொடர்பான தகவல்கள் வெளியே கசிந்தால் உள்ளுர் பணியாளர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பப் போவதாகவும் புதிதாக வந்த ஆணையாளர் மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Comments
Loading...