தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய நிலைகள் மீது அத்துமீறி பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லையில் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.ceasefire_violation

ஜம்மு காஷ்மீரில் எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தும் அடங்காத பாகிஸ்தான் ராணுவம் அவ்வபோது எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவும் எல்லையில் இந்திய நிலைகளை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. ஜம்மு மாவட்டம் அர்னியா, ஆர்.எஸ்.புரா ஆகிய செக்டார்களில் சர்வதேச எல்லையில் இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் விடியவிடிய துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் சிறியரக துப்பாக்கிகள் மற்றும் மோட்டார் பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தியது என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அடாவடி தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூடு அதிகாலை 2;30 மணியளவில் முடிவுக்கு வந்தது. “எல்லையில் வசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு மாற்றப்படவில்லை. தொடர்ந்து நிலையை கவனித்து வருகிறோம்”, என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “தேவைப்பட்டால், எல்லையில் உள்ள மக்கள் வெளியேற்றப் படுவார்கள்,” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஜோரா-பார்ம், நாவாபிந்த், ஜாக்னுசாக், கோரா, பித்தால், விக்ராமான், செனாக் ஆகிய பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மோட்டார் பீரங்கியை கொண்டு சுட்ட குண்டு அர்னியா எல்லை டவுன் பகுதியில் தக்கியுள்ளது. இதில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்களில் ஈடுபட்டதால் எல்லையில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. எல்லையில் நேற்றுஇரவு மக்கள் தங்களது வீட்டில் விளக்குகளை அணைத்துவிட்டு, பதுங்கு குழிகள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 6 முறைக்கு மேல் போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Comments
Loading...