தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டெல்லி அரசில் முக்கிய துறைகளில் கவர்னருக்கே முழுஅதிகாரம்; மத்திய அரசு அறிவிப்பு

delhiடெல்லி மாநிலத்தில் உயர் அதிகாரிகளை நியமனம் செய்வதில் கவர்னருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லி மாநில துணை நிலை கவர்னர் நஜீப் ஜங், கடந்த வாரம் கெஜ்ரிவால் அரசின் தற்காலிக தலைமைச் செயலாளராக சகுந்தலா கேம்லின் என்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்தார்.

இதற்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் சில உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமித்தும், சிலரை இட மாறுதலும் செய்தும் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இவை எதுவுமே செல்லாது என்று கவர்னர் நஜீப் ஜங் அதிரடியாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இருவரும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தனித்தனியாக சந்தித்து பேசினர். எனினும் பிரச்சினை தீரவில்லை.

இந்த அதிகார மோதலில் பிரதமர் மோடி தலையிட்டு பிரச்சினையை தீர்த்து வைக்கவேண்டும் என்று கெஜ்ரிவால் அவருக்கு கடிதமும் எழுதினார்.

இதனிடையே, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, இருவரும் டெல்லி மாநில அரசில் கவர்னருக்கும், மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கும் இடையே நடைபெறும் பனிப்போர் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களில் துணை நிலை கவர்னருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அரசிதழில் வெளியிடப்பட்ட  அறிவிப்பில் :-

தேசியத் தலைநகரான டெல்லி மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். சேவைத்துறைகள், பொது ஒழுங்கு, போலீஸ் மற்றும் நிலம் தொடர்பான விவகாரங்களில் டெல்லியைப் பொறுத்தவரை துணை நிலை கவர்னருக்கே முழுமையான அதிகாரம் உண்டு. அவர் தன்னிச்சையான முறையில் இந்த துறைகளின் மீது முடிவுகளை எடுக்கலாம்.

அதே நேரம் கவர்னர் விரும்பினால் இந்த சேவைகளில் மாநில முதலமைச்சருடனோ அல்லது மந்திரிகளுடனோ ஆலோசனை நடத்தலாம்.

மேற்கண்ட 4 துறைகளிலும் அரசியலமைப்பு சட்டம் 233 ஏ.ஏ. அட்டவணையின்படி டெல்லி மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இவை டெல்லி சட்டமன்ற அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதாகும். டெல்லி மாநில துணை நிலை கவர்னருக்கு உயர் அதிகாரிகளை நியமிக்கும் மற்றும் இட மாறுதல் செய்யும் அதிகாரம் உண்டு.

மேலும் லஞ்ச தடுப்பு பிரிவு போலீசார் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள் மீது கோர்ட்டில் தனிப்பட்ட முறையில் வழக்குகள் எதையும் தொடர முடியாது என அரசிதழ் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments
Loading...