தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : நாளையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது

election-commission1சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் வரும் வியாழக்கிழமையுடன் (ஜூன் 25) ஓய்கிறது. எனவே அன்றைய தினம் மாலை 5 மணிக்கு மேல் வெளி ஊர்களைச் சேர்ந்தவர்கள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியானது. தேர்தலில் போட்டியிட வேட்புமனுதாக்கல் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர். இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வர் ஜெயலலிதா கடந்த திங்கள்கிழமை (ஜூன் 22) ஆர்.கே.நகர் தொகுதியில்  பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜெயலலிதாவுக்காக தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் வியாழக்கிழமை (ஜூன் 25) மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதைத் தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் எனவும், திருமண மண்டபங்கள், விடுதிகளில் யாரும் தங்கியிருக்கக் கூடாது என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

வரும் வியாழக்கிழமை மாலையில் இருந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட இடங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று அவர் கூறினார். மேலும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு வரும் சனிக்கிழமை (ஜூன் 27) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஜூன் 30 ஆம் தேதியன்று, வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

Comments
Loading...